“செம்மணியை பார்வையிடுவதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தும் வாகனத்தை சற்று நிறுத்தி அங்கு சென்றோம்”
Share
யாழ்ப்பாணத்தில் தனது அனுபவத்தை ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர்
செம்மணி மனித புதைகுழி பகுதிக்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தினால் மட்டுமே நாங்கள் எமது வாகனத்தை அங்கே நிறுத்தினோம். என்றாவது ஒரு நாள் அந்த இடத்தைப் பார்வையிட முடியும் என நம்புகிறேன் என இலங்கைக்கான கனடா தூதுவர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியை பார்வையிட இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவரின் குழுவிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்காமையால் கனடிய தூதுவரின் குழு செம்மணி பகுதிக்கு விஜயம் செய்து திரும்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கனடா நாட்டின் தூதுவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “நான் யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பயணம் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
நான் இதற்கு முன் செம்மணி பகுதிக்குச் சென்றதே இல்லை என்பதால், வழியில் அங்கே சற்று நிற்கலாம் என முடிவு செய்தேன். மேலும், இந்த பருவக்காலத்திற்குப் பிறகு அந்த இடம் மூடப்படப் போகிறது என்பதையும் நான் அறிந்திருந்தேன். எனவே, அங்கு என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே நாங்கள் சற்று நின்றோம்.
பார்வையிடுவதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும், இதற்கு முன் அந்த இடத்திற்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தினால் மட்டுமே நாங்கள் அங்கே நிறுத்தினோம்.
என்றாவது ஒரு நாள் அந்த இடத்தைப் பார்வையிட முடியும் என நம்புகிறேன், ஆனால் நேற்று அது சாத்தியப்படவில்லை. நாங்கள் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திற்காக தான் வந்துகொண்டிருந்தோம். அந்த இடத்தைப் பார்ப்பது எனக்கு முக்கியமாக இருந்தது. அங்கிருந்தவர்களைச் சந்தித்துச் சிறிய தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டோம் – என்றார்.















