LOADING

Type to search

இலங்கை அரசியல்

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

Share

– பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை

இலங்கையின் நீண்டகால வரலாற்றைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம்” வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 18ஆம் திகதியிடப்பட்ட அரசிதழ் இணைப்பாகத் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் புதிய சட்டமூலம் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:-

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களைப் பயங்கரவாதச் செயல்களில் இருந்து பாதுகாத்தல், இலங்கையின் நிலப்பரப்பு வெளிநாடுகளில் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணுதல், கைது செய்தல், தடுத்துவைத்தல், விசாரணை செய்தல் மற்றும் தண்டித்தல் ஆகியவற்றை இந்தச் சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் புதிய சட்டமூலத்தின் விதிகளானது, இலங்கைக் குடிமக்களால் நாட்டுக்குள்ளும் வெளியிலும் இழைக்கப்படும் குற்றங்களுக்கும், இலங்கைக் குடிமக்கள், தூதரகங்கள் மற்றும் அரச சொத்துக்கள் மீது வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கும் பொருந்தும்.

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அல்லது அரசியல் அல்லது சித்தாபூர்வமான இலக்கை அடைவதற்காக அரசு அல்லது சர்வதேச அமைப்பைக் செயற்படச் செய்யும் அல்லது தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்களே பயங்கரவாதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

உயிர்ச்சேதம், பலத்த காயம், பணயக்கைதியாகப் பிடித்தல், பொதுக் கட்டமைப்புக்குப் பாரிய சேதம், தீவிர சுற்றுச்சூழல் பாதிப்பு, முக்கிய கட்டமைப்பு மீதான சைபர் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாதத் ஒப்பந்தங்களின் கீழ்வரும் செயற்பாடுகள் இதில் அடங்கும்.

பயங்கரவாதச் செயலால் மரணம் விளைவித்ததாகக் குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஏனைய பயங்கரவாதக் குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு செய்தல், நிதியுதவி அளித்தல், பயிற்சி அளித்தல், தளவாட ஆதரவு வழங்குதல் அல்லது நடவடிக்கைகளில் பங்கெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், பயங்கரவாதச் சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், குற்றவாளிகளுக்கு உதவுதல், பயங்கரவாதத் தகவல்களை மறைத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பிரசுரங்களை வெளியிடுதல் போன்றவையும் இந்தச் சட்டமூலத்தின் கீழ் குற்றமாக்கப்பட்டுள்ளன.

போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், வாதாடல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவை மட்டுமேயான காரணத்துக்காக அவை பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதப்பட மாட்டாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் வேண்டுமென்றே பயங்கரவாதத்தைத் தூண்டாத பட்சத்தில், பத்திரிகைத் துறை, கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, சிவில் சமூக நடவடிக்கைகள், சட்ட உதவி, கலை வெளிப்பாடுகள், அரசியல் விமர்சனங்கள் மற்றும் அமைதியான கருத்து வெளிப்பாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது.

சந்தேகநபர்களுக்குக் கைதுக்கான காரணங்கள் மற்றும் சட்ட உதவி பெறும் உரிமை ஆகியவை தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கைதானது குறித்து உறவினர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.

பொதுவாகச் சந்தேகநபர் 48 மணி நேரத்துக்குள் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விண்ணப்பத்தின் பேரில், தொடர்புடைய அமைச்சின் செயலாளரால் தடுத்துவைப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம்.

ஆரம்பக் தடுப்புக்காவல் உத்தரவு அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், மொத்தத் தடுப்புக்காவல் காலம் ஆரம்பத் தேதியிலிருந்து ஒரு வருடத்தை தாண்டக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட நீடிப்புகளுக்கு மேல்நீதிமன்ற அனுமதி கட்டாயமாகும்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன மதிப்பீட்டுக் குழு (மூலம் தடுப்புக்காவல் உத்தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, அவற்றை நீடிக்கலாமா அல்லது இரத்து செய்யலாமா என்பது குறித்துப் பரிந்துரைக்கப்படும்.

நீதிவான்கள் தடுத்துவைக்கப்பட்டவர்களின் நலன்களைக் காலமுறைக்கேற்ப பரிசீலிக்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மையங்கள் நீதிவான்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

வதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற நடத்துறைகள் சந்தேகிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளும் இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது நிறைவேற்றப்பட்டால், இந்தச் சட்டம் நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்து புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டக் கட்டமைப்பை உருவாக்கும்.