LOADING

Type to search

இலங்கை அரசியல்

நம்பிக்கையான கூட்டாளியாக இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்தே தீரும்!

Share

– ரில்வின் சில்வாவிடம் ஜெய்சங்கர் உறுதி

மேற்படி சந்திப்பு தொடர்பாக கனடா உதயனுக்கு கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் ஒருவர்” இந்தியாவை விட சீனாவையே ஆதரிக்கும் போக்கும் தமிழர்கள் மீதான இனவாதப் பார்வையும் கொண்ட ஜேவிபி எவ்வாறு தனது அரசியல் இருப்பை தக்கவைக்கப் போகின்றது என்பதை தமிழர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ரில்வின் சில்வா குழுவினருடனான சந்திப்புக்குப் பின்னர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அவரையும் இலங்கைப் பிரதிநிதிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

“நமது இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நல்லதொரு கலந்துரையாடல் நடைபெற்றது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நம்பிக்கையான கூட்டாளி என்ற முறையில், இலங்கையின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. – ஜே.வி.பி. உறவுகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பது மற்றும் இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதே ரில்வின் சில்வா குழுவினருடனான இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழுவில் சந்திரிகா அதிகாரி (மத்திய குழு உறுப்பினர்), அபுபக்கர் ஆதம்பாவா (நாடாளுமன்ற உறுப்பினர்), கபிலன் சுந்தரமூர்த்தி (மாவட்டக் குழு உறுப்பினர்) மற்றும் கல்பனா மதுபாஷினி (சர்வதேச விவகார உறுப்பினர்) ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் ரில்வின் சில்வாவின் இரண்டாவது இந்திய விஜயம் இதுவாகும்.