‘டோரதி’ படக்குழுவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டினார்
Share
‘டோரதி’ படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து , ராஜு முருகன் உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது.
இதைவிடச் சிறந்தது வேறென்ன வேண்டும். அந்தவகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டோரதி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பான பதிவை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவா…. ‘அற்புதம்… அழகு… அசத்தல்’ !! தலைவருக்கு டோரதி படம் மிகவும் பிடித்திருந்தது; படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாகப் பேசினார்… இதைவிடச் சிறந்தது வேறென்ன வேண்டும்… அந்த உரையாடலையும், அவர் சொன்ன அந்த வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் கொள்வேன்… “இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்… உங்களுக்கு என் சல்யூட்… மகிழ்ச்சியில் மிதக்கிறேன் .. உங்களை நேசிக்கிறேன் தலைவா.. என்று பதிவிட்டுள்ளார்.















