இணைந்து வாழ்தலில் பிரச்சனை வந்தால் நீதிமன்றத்தை நாடக் கூடாதென சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
Share
‘இணைந்து வாழ்கின்றோம்’ என்று வாழ்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டப்பூர்வ உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் லிவிங் டு கெதர் (திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வசிக்கும்) கலாச்சாரம் இந்தியாவிலும் தற்போது பரவியிருக்கிறது. அப்படி வசிப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது என நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.
கோவை உடையார் பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், தனது கணவர் ஜோசப் பேபியுடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2013ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணமானதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஜோசப் பேபி தரப்பில், தனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதால் அவரது வழக்கை நிராகரிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார்.
மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு, பணப் பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி வழக்குத் தொடர்ந்திருப்பது ஆதாரங்கள் மூலமாக தெளிவாக தெரிவதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் லிவிங் டு கெதரில் வாழ்பவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டபூர்வமான உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.










