குரலற்றவர்களின் குரல்’ : சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு
Share
சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தை இயக்குனர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரது சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. தமிழகத்தில் 1990-களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதை ஜெய்பீம் விவரிக்கிறது.
இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கரும் ஜெய்பீம் படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குரலற்றவர்களின் குரலாக ஜெய்பீம் அமைந்துள்ளது. விரிவான விவரங்களையும், யதார்த்தமான பதிவுகளையும் இடம்பெறச் செய்து, காண்போரை படத்துடன் ஒன்றச் செய்த இயக்குனர் பாராட்டுக்குரியவர். சமூகத்தின் மீதான நடிகர் சூர்யாவின் அக்கறையை பாராட்டத்தக்கது. வலிமையான படங்கள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஜெய்பீம் மீண்டும் நிரூபித்துள்ளது’ என கூறியுள்ளார்.













