தமிழ் சினிமாவில் மஹாகவி’ பாரதி பாடல்கள்
Share
அத்தியாயம் 4
“பாரதமெங்கும் பாரதி” எனும் தொடர் நிகழ்ச்சியை பாரத் தேசத்தின் 28 மாநில நகரங்களிலும், 8 எல்லையூர்களிலும் ( TERRITORIES ) கொண்டு செல்ல வேண்டும் எனும் உத்வேகத்துடன் செயலாற்றிவரும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு நிறுவன அதிபர் திரு. முரளி ஐயாவும், அவருடன் இணைந்து கைகொடுக்கும் சகோதர நிறுவனங்களும் பாரதி நூற்றாண்டு நினைவாக கொண்டாடி வரும் இக்காலத்தில் ‘பாரெங்கும் பாரதியை’ அறியவைப்போம் என என் பங்கிற்கு “தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்கள்” என எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை எண்ணி எண்ணி பேருவகை கொள்கிறேன்!
மஹாகவி பாரதி தனக்குத் தானே வேண்டியதை போன்று, ” கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதுக்குள்ள மனத்திடனும், இளைஞர்களுடைய உற்சாகமும், குழந்தையின் இதயமும், தேவர்களே! எனக்கு எப்போதும் நிலைத்திருக்க அருள் செய்யுங்கள்”, என இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்.
‘நாம் இருவர்’ ‘வேதாள உலகம்’ ஆகிய இரு படங்களிலும் பாரதி எழுதிய பாடல்களை அறிமுகம் செய்து வைத்த (அமரர்) ஏ.வி.எம்.செட்டியார் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த ‘வாழ்க்கை’ திரைப்படத்திலும் பாரதியின் தேசிய கீதப்பாடலான ‘பாரத சமுதாயம் வாழ்கவே…’ பாடலைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
இப்படம் 1949 ல் வெளியானது.
இப்படத்தின் மூலம் தான் பரதக் கலையில் சிறந்தவர்களுள் ஒருவரான திருமதி வைஜெயந்திமாலா அவர்களை ஏவிஎம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு நாட்டிய நிகழ்ச்சியாக வைஜெயந்திமாலா அவர்களின் நடனம் இடம் பெற்றிருந்தது. ‘மகாகவி’ யாரால் ‘பியாக்’ ராகத்தில் எழுதப்பெற்ற இப்பாடல் திருமதி டீ.கே பட்டம்மாள் அம்மையாரால் பாடப்பெற்றது.
பாடல் இதுதான்
பல்லவி: பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க! வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய
(பாரத)
அனுபல்லவி :
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துகொரு புதுமை – வாழ்க (பாரத)
பாரத மாதாவை பின்புலத்தில் கொண்டு
வைஜெயந்திமாலாவும் – தோழியர்களும் ஆடிப்
பாடும் இக்காட்சி படத்தில் அழகாகக்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு ஏவிஎம் அவர்கள் பாரதியின் தேசிய கீதங்களை தனது தயாரிப்புகளில் இடம்பெறச் செய்து தேசிய உணர்வையும் தேச பக்தியையும் வளர்த்தெடுப்பதற்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர்.
அடுத்து 1954 இல் ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘பெண்’ ஆகும்.
இப்படமும் அக்காலத்தில் வெளியான சிறந்ததொரு படமாகும். இதிலும் வைஜயந்திமாலா – அஞ்சலிதேவி – ஜெமினி கணேசன் – வீணை எஸ் பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்று நடித்திருந்தனர்.
‘மகாகவி’ பாரதியார் பெண்குலத்தை பெருமைப்படுத்தி எழுதியிருந்த பாடல்களுள் ஒன்றான
“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்துவோம்” என ஆரம்பிக்கும் இப்பாடலை பிரபல பின்னணி பாடகர் ரி. ஏ மோதி பாடியிருந்தார். படத்தில் இப்பாடலுக்கு பாடி நடித்தவர் ஜெமினி கணேசன். துணையாக ஆடியவர் வீணை எஸ் பாலச்சந்தராகும்.
ஏவிஎம் மின் ‘பெண்’ படம் வெளிவருவதற்கு முன்பே தயாராகி வெளிவந்த படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘ஓர் இரவு’ படமாகும். இப்படம் 1951 இல் வெளிவந்தது. இதுவும் ஏவிஎம் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்கி அண்ணா எழுதிய சித்திரமாகும்.
இக்காலத்தில் அண்ணாவுடன் செட்டியாருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஏவிஎம் அவர்கள் தனக்கு மிகுந்த மிகவும் தெரிந்த இராம சுப்பையா என்ற நண்பர் மூலம் அண்ணாவுடன் தொடர்பு கொண்டார். இந்த ராமசுப்பையர் திராவிடக் கொள்கைகளில் பற்றுள்ளவர்.
அண்ணாவுடன் நட்புடையவர். பெரியவர் இராம சுப்பையா தான் இயக்குனர் எஸ் பி முத்துராமன், திராவிட கொள்கை பரப்பாளர் திரு சுப வீரபாண்டியன் ஆகியோரின் தந்தையுமாவார். திரு இராம சுப்பையா அவர்கள் விருப்புக்கு ஏற்ப அண்ணா அவர்களால் ஒரு இரவிலேயே எழுதப்பெற்ற திரைக்கதைதான் ‘ஓர் இரவு’ என படமாக்கப்பட்டது. இப்படத்தின் கதை வசனத்தை கவனித்து விமர்சனம் எழுதிய கல்கி ஆசிரியர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அறிஞர் அண்ணாவை “தென்னாட்டு பெர்னாட்ஷா” என புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். நாமும் பெருமிதம் அடைந்தோம்.

‘ஓர் இரவு’ படத்தில் இடம்பெற்ற மகாகவியின் பாடல் வரிகள் ‘முரசு’ தலைப்பில் இடம் பெற்றவையாகும்.
காட்சியில் ‘நடிப்பிசைப் புலவர்’ கே ஆர் ராமசாமி தன் சொந்தக் குரலில் பாடுவார். அவருடன் ஏ நாகேஸ்வரராவ், திருமதி லலிதா ஆகியோர் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் பாடல்காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இப்பாடலுடனேயே படம் நிறைவுபெறும்.
‘முரசு’ பாடலில் இடம்பெறும் பாரதியின் முழுமையான கவிதை வரிகளில் பொருத்தமான வரிகளை மட்டும் வெட்டி ஒட்டி இசையமைத்திருந்தார்கள்.
இதோ பாடல் வரிகள்…
“கொட்டு முரசே.. கொட்டு முரசே..
அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால் (கொட்டு)
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவற்றிங்கு வாழ்வோம் – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம் (கொட்டு)
ஒன்றென்று கொட்டு முரசே – அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே – இந்தச்
நானில மாந்தருக் கெல்லாம் (கொட்டு)
பாரதியார் “காணி நிலம் வேண்டும்” என்று பராசக்தியைப் பார்த்து யாருக்காக பாடினார் ?
அடுத்த இதழில் பதில் கிடைக்கும்
-வீணை மைந்தன்













