தமிழ் சினிமாவில் ‘மஹாகவி’ பாரதி பாடல்கள்
Share
– வீணைமைந்தன்
தமிழச்சியின் தாய்ப்பால் குடித்தவன் ; தமிழ் அறிந்தவன் ; எழுதுபவன்; வாசிப்பவன்; பேசுபவன்; தமிழைச் சுவாசிப்பவன் எவனும் ‘மஹாகவி’ சுப்பிரமணிய பாரதி எனும் நாமத்தை எக்கணமும் சிந்தையில் வைத்தே தொழுவான்!
அப்படிப்பட்ட தமிழனே பாரதியைக் கொண்டாடுவான்.
“நமக்குத் தொழில் கவிதை;
நாட்டிற்குழைத்தல்;
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்;
உமைக்கினிய மைந்தன் கணநாதன்,
நம் குடியை வாழ்விப்பான்!
சிந்தையே இம்மூன்றும் செய்!” , என்றுரைத்த பாரதி வழி வந்தவர்களே அவனது வாரிசுகளேயாவர்!. அவ்வழியில் வாரிசுகளில் ஒருவராக வந்தவரான “நாமக்கல் கவிஞர்” பாட்டுக்கொரு புலவன் பாரதிக்குப் பிறகு, கவிதை உலகில் நாட்டு மக்களின் வாட்டத்தைப் போக்க ‘நான்’ என்று முனைந்தவராவார்!
“அஞ்சியஞ்சி உடல் வளர்க்கும் ஆசையாலே
அடிமை மனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசினாலும்
விழித்த கண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
நேர்மையுடன் சுதந்திரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
வித்தகனாம் ‘பாரதி ஒரு ஆசான்’ மெய்தான்! எனப் பாரதியைக் கொண்டாடி வழி முடிந்தவர் நமது நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை ஆவார்.
இவ்வாறு கற்றோரால் காமுற்றுப் போற்றப்படும் மகாகவியின் பாடல்கள் சினிமா சித்திரங்களுக்கு எவ்வாறு அணி சேரத்தன என நோக்குங்கால் முதன் முதலாக மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கும் பாரதி பாடல் புகழ் சேர்ந்துள்ளதை எண்ணி ஆனந்தம் கொள்கிறேன்.
‘அந்தமான் கைதி’ இப்படம் 1952 இல் வெளியானது. குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் லெளகீகப் பிரச்சனைகளைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சமூகப் படமாகும். மக்கள் திலகம் திரையுலகில் தனக்கு ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து வளர்ந்து வந்த காலமது. இப்படத்தில் இடம்பெற்ற பாரதி பாடல் “காணி நிலம் வேண்டும்..” என ஆரம்பிக்கும் பாடலாகும். நாயகன் (எம்ஜிஆர்) நடராஜனுக்கும், அவருடைய காதலிக்கும் இப்பாடல் வரிகள் வெட்டி ஒட்டப்பட்டதாக அமைத்து இசையமைப்பாளர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் இசை அமைக்கப்பட்டிருந்தது. இசைச்சித்தர் சி.எஸ். ஜெயராமனும் – பாடகி எம் எல் வசந்தகுமாரியும் பின்னணி குரல் வழங்கியிருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை மட்டும் இங்கு பதிவு செய்துள்ளேன்.
“காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறுத்தினவாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் – அங்குக்
கேணியருகினிலே தென்னை மரம்
கீற்று மிளநீரும். (காணிநிலம்)
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச்சுடர் போல – நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங்குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும் (காணிநிலம்)
அடுத்து 1955 இல் வெளிவந்த படம் “கள்வனின் காதலி”. இப்படத்தின் மூலம் கதை ‘கல்கி’ இதழில் தொடராக ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி (அமரர். கல்கி) அவர்களால் தொடராக எழுதப்பட்ட நாவலாகும்.
கவிஞர் எஸ்.டி சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். பி.பானுமதி அம்மாவுடன் முதன் முதலாக நடிகர் திலகம் ஜோடி சேர்ந்து நடித்த படம் இதுவாகும்.
கள்வனாக நடித்த முத்தையனும் (சிவாஜி) காதலி கல்யாணியாக பானுமதியும் இணைந்து பாடிய பாடலே “மனதில் உறுதி வேண்டும்”.. என ஆரம்பிக்கும் பாரதியின் நம்பிக்கை வரிகள்.
நடிகர் திலகம் நடித்து முதலாவது பாரதி பாடலாக இப்பாடல் அமைந்தது. திருமதி பானுமதி பெண் குரல், ஆண் குரல் ஏழிசை வேந்தர் (அமரர்) ரி. எம் சௌந்தரராஜன் இருவரும் பாடியிருப்பார்கள். இப்பாடலுக்கு (அமரர்கள்) கோவிந்தராஜுலு நாயுடுவும் – பின்னணி பாடகர் கண்டசாலா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
‘மனதில் உறுதி வேண்டும்’ பாடல் வரிகள் காதலன் காதலிக்காகப் பிரித்து பாட வைத்திருப்பார்கள்.
இதோ பாடல் வரிகள்
“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
(பெரிய கடவுள் காக்க வேண்டும்)
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்!
‘மகாகவி’ கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும் எனும் இலட்சியத்தை வலியுறுத்துவது போல சிவாஜி – பானுமதி ஆகிய கலைஞர்களுக்கு காதல் காட்சி அமைந்திருந்தது.
மேலும் இப்படத்தின் தலைப்புப் பாடலாக (TITLE SONG) ‘மகாகவி’யின்
“தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா…” என ஆரம்பிக்கும் பாடலை பிரபல பின்னணி பாடகியான திருமதி எம் எல் வசந்தகுமாரி, திருமதி கானசரஸ்வதி இருவரும் பாடியிருந்தார்கள்
அடுத்த இதழில்…
அறிஞர். அண்ணா அவர்கள் அது கதைக்கு – கலைஞர் மு கருணாநிதி உரையாடல் எழுதியிருந்த படத்தில் இடம்பெற்ற மஹாகவி பாரதி பாடல் என்ன..?
வீணை மைந்தன்













