பராசக்தி, ரத்தக்கண்ணீரை இயக்கிய இரட்டை இயக்குநரில் ஒருவர் – பஞ்சு
Share
(இன்று பிறந்தநாள்)
தமிழ்சினிமாவில் இரட்டை இயக்குநர்களில் ஒருவர், பஞ்சு. இவருடன் இணைந்து இயங்கியவர், கிருஷ்ணன்-. இவர்கள் இயக்கும் படங்களில் டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு என்றே குறிப்பிடப்படும்.
நடிகர் திலகத்தின் அறிமுகப்படமான பராசக்தியை இயக்கிய இந்த இரட்டையர்கள் தான், 25 ஆண்டுகள் கழித்து 1977-ல் அதே நடிகர்திலகத்தின் இளையதலைமுறை படத்தையும் இயக்கினார்கள்.
பஞ்சு, கும்பகோணம் உமையாள்புரத்தில் 1915 ஜனவரி 24-ல் பிறந்தவர். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.
சென்னையில் 1909 ஜூலை 18-ல் பிறந்த ரா.கிருஷ்ணன், தொடக்கத்தில் கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் பணியாற்றி பின்பு பஞ்சுவுடன் இணைந்து படங்களை இயக்கத்தொடங்கினார்.
பின்பு இரட்டை இயக்குநர்களாக கிருஷ்ணனும், பஞ்சுவும் இணைந்து 50க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கினர். இவர்கள் இயக்கிய பராசக்தி, நல்லதம்பி, புதையல், ரத்தக்கண்ணீர், தெய்வப்பிறவி, குங்குமம், சர்வர் சுந்தரம், பெற்றால்தான் பிள்ளையா, உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், இதயவீணை, வாழ்ந்து காட்டுகிறேன், இளையதலைமுறை, நாடகமே உலகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.சிவாஜியின் அறிமுகப்படத்துடன் அவரது 125-வது படமான உயர்ந்த மனிதனையும் இவர்களே இயக்கினார்கள்.
1984 ஏப்ரல் 6 அன்று பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார். பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 ஜூலை 17 அன்று தனது 87 வயதில் சென்னையில் காலமானார்.













