போலந்தில் 6 பேரை சுட்டு கொன்ற கொலையாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்
Share
போலந்து நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை சுட்டு கொன்ற கொலையாளி மருத்வமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிராகோவ் நகரில் கடந்த சனிக்கிழமை பயங்கர சம்பவம் நடந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட 24 வயது வாலிபர் ஒருவர், ராணுவ உடை மற்றும் குண்டு துளைக்காத கவச உடை அணிந்து காரில் நகரின் முக்கிய சதுக்கத்திற்கு வந்தார். அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில், அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 4 பேர் போலந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஆணும், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை, துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை சுட்டு பிடித்தனர். காவல்துறையிரின் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், அந்த வாலிபர் தொடர்ந்து பொதுமக்களை நோக்கி சுட்டு கொண்டிருந்தார். பின்னர் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, கொலையாளியின் சொந்த ஊரான ஆஸ்ட்ரோவிச் ஸ்விடோக்ரிஸ்கி நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர். கிராகோவ் நகருக்கு வருவதற்கு முன்பே, அந்த வாலிபர் தனது குடும்பத்தினரையும் சுட்டு கொன்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.













