LOADING

Type to search

சினிமா

சிவாஜி, எம்ஜிஆரின் ஆஸ்தானப்பாடகர் டிஎம் சவுந்தரராஜன்

Share

(இன்று-மார்ச் 24-பிறந்தநாள்)

தமிழ் சினிமா இசையின் பொற்காலம் என்பது 1960 & 90க்கு இடைப்பட்ட காலம் எனலாம். ஏனெனில் அந்த கால கட்டத்தில் தான் திரை இசைத்திலகம் கேவி மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் கோலோச்சினார்கள். அவர்கள் இசையில் தந்த பாடல்கள் எல்லாம் தேனாறுகளாக ஒலித்தன.

மெட்டு, வரிகள், குரல் இனிமை என மூன்றும் ஒருங்கே அமைந்ததாலேயே பாடல்கள் தேனாக இனித்தன. அந்த இனிய பாடல்களைத்தந்த பின்னணிப்பாடகர்களில் பிரதானமானவர், டிஎம் சவுந்தரராஜன்.

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் பாட மாட்டார்கள். ஆனால் அவர்கள் குரலுக்கு ஏற்ப பாடி, ரசிகர்கள் மனதில் நங்கூரமாய்ப்பதிந்தவர், டிஎம்எஸ். சிவாஜிக்காக, எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்கள் காலத்தைக்கடந்து இன்றும் வெற்றிகரமாக ஒலிக்கின்றன.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகள் கோலோச்சிய டிஎம்எஸ் பிறந்தது, மதுரையில் வசித்த சவுராஷ்டிரக்குடும்பத்தில். தொ. அ. மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாக 1922 மார்ச் 24&ந் தேதி பிறந்தார், சௌந்தரராஜன்.

பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் டிஎம்எஸ் நுழைந்தார்.

பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜிக்காக சிதம்பரம் ஜெயராமன் தான் பாடுவதாக இருந்தது. அப்போது சிவாஜிக்கு டிஎம்எஸ்சை அறிமுகம் செய்து வைத்து பாட வாய்ப்பு கேட்டனர். சிவாஜி மனமின்றி ஒப்புக் கொண்டார். ஆனால் டிஎம்எஸ் பாடி, பாடல்களுக்காகவே அந்தப்படம் பெரும் பெற்றி பெற்றபின், டிஎம்எஸ், சிவாஜியின் ஆஸ்தானப்பாடகராகவே மாறி விட்டார்.

அதேநேரம் சிவாஜியின் சம போட்டியாளரான எம்ஜிஆருக்கும் குரல் பொருந்தும் அளவுக்குப்பாடியதால் அவருக்கும் டிஎம்எஸ்சே ஆஸ்தான பாடகரானார்.

மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்து மலராத பாதி மலர் போல, போனால் போகட்டும் போடா, சுமைதாங்கி சாய்ந்தால், நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு (இன்னும் ஏராளம்) போன்ற பாடல்கள் சிவாஜிக்காகவும், அச்சம் என்பது மடமையடா, சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, நான் ஆணையிட்டால், புதிய வானம் போன்ற பாடல்கள் எம்ஜிஆருக்காகவும் டிஎம்எஸ் பாடி இன்றும் கணீர் என ஒலித்து வருகின்றன.

சிவாஜி, எம்.ஜி.ஆர் மட்டுமின்றி ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ். எஸ். ராஜேந்திரன், நாகேஷ், ரஜினி, கமல் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு.

ஒருதலை ராகத்தில் டி.ராஜேந்தர் இசையில் இவர் பாடிய “நான் ஒரு ராசியில்லா ராஜா” பாடலும் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் அதன்பிறகு நான் ராசியில்லாத பாடகராகவே முத்திரை குத்தப்பட்டு விட்டேன் என்று கவலைப்பட்டார், டிஎம்எஸ். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார், டிஎம்எஸ்.
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் பெரும் புகழடைந்தது.

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். சௌந்தரராஜனின் மனைவி பெயர் சுமுத்திரா.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருது-களைப் பெற்றுள்ள டிஎம்எஸ் நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த டிஎம்எஸ், 2013 மே 25-ம் தேதி சென்னையில் காலமானார்.

டிஎம்எஸ் போலவே புகழ்பெற்ற கணீர் குரல் பாடகரான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், டிஎம்எஸ் பிறந்த மார்ச் 24&ந் தேதி தான் (ஆண்டு 1988) காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மணிராஜ்,
திருநெல்வேலி.