தமிழ் சினிமாவில் மஹாகவி பாரதி பாடல்கள் – வீணை மைந்தன்
Share
அத்தியாயம் 16
“புவியனைத்தும் போற்றத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்ற, கவியரசன் இல்லை யென்ற குறை என்னால் தீர்ந்தது”.
“நமக்குத் தொழில் கவிதை;
நாட்டிற்குழைத்தல்;
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்;
உமைக்கினிய மைந்தன் கணநாதன்,
நம் குடியை வாழ்விப்பான்!
சிந்தையே இம்மூன்றும் செய்!” , என்றும்
சுவை புதிது
பொருள் புதிது
வளம் புதிது
சொல் புதிது
சோதிமிக்க நவகவிதை, என்று சூளுரைத்த கவித தெய்வம் சுப்பிரமணிய பாரதியை எந்நாளும் வணங்கிடுவோம்.
‘எட்டயபுரத்துக் கருப்பையைக் கொண்டதாய்,
எப்படிப் பெற்றாள் இந்தச் சூரிய நெருப்பை;
என்று வியந்து வியந்து நோக்கும் வண்ணம், அவரால் எழுதப்பட்ட கவிதைகளும், பாடல்வரிகளும் தமிழ் சினிமாவின் இலக்கியக் கற்பு சேதமுறாமல் தொடர்வதற்க்கும் உதவியதே எனப் பேரானந்தம் கொள்கிறேன்.
திரைப்படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப தேவையான நவரசங்களை வெளிப்படுத்தும் பாடல்வரிகள் பாரதியின் கவிதை வரிகளுள் செறிந்திருப்பதால் தான் அவை திரைப்படங்களிலும் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டன.
பாரதி நினைவு நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் இக்காலத்தில் நானும் பாரதி ஐயாவை நினைவு கொண்டு எழுத வேண்டும் என எண்ணிய முயற்சியும் – தேடலும் இதுவாகும்.
எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் ‘பாரதி ஐயா’ பற்றி அறியவோ – எழுதவோ – ஆய்வு செய்யவோ முன்வரும்போது – எனது தொடர் கட்டுரைச் செய்திகள் பயன் தருமானால் மிகுந்த பேருவகை அடைவேன்!

‘மகாகவி’ பாரதியின் திரைப் பாடல்கள் முழுமையும் நமக்கு கிடைக்கவில்லை. எனக்கு கிடைத்த அல்லது எனது சினிமா நினைவில் உறைந்திருந்த பாடல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
மகாகவி பாரதி ஒரு ‘வரகவி’யாவார். காளியின் அருள் பெற்றவர். பால பருவத்திலேயே யாப்பிலக்கணத்துடன் கூடிய செய்யுள்களையும் – தாளகதியுடன் பாடல்களையும், எழுதும் ஆற்றல் பெற்றிருந்தவர். ஆனால் அவரது வாழ்நாளில் அவரது கவிதைகள் பெற்றிருக்க வேண்டிய முழுமையான மரியாதையை பெறவில்லை என்பது பொதுவானதொரு கருத்தாகும். ஏனெனில், அன்றைய கால ஆங்கிலேய ஆட்சியை பாரதி எதிர்த்த காரணத்தால், அவரது கவிதைகள் மீதான தடைகள் இருந்தன. அதையும் மீறித்தான் அவரது தேசபக்தி பாடல்கள் சுதந்திர தாகத்துடன் வீறுகொண்டு பாடப்பெற்றவையாகும்.
தனது பாடல்களை பாரதியே ராகத்துடன் பல பொதுக்கூட்டங்களில் பாடியிருக்கிறார். தனது பல இசை பாடல்களுக்கு ராகம், தாளம், ஸ்வரவரிசையையும் பாரதியே எழுதியுள்ளார்.
பாரதியின் எழுத்துலகில் அவரது கவிதைகளின் பங்களிப்பு சுமார் 10% மட்டுமே! அவரது பத்திரிகைப் பணியில் செய்தி கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், மதிப்புரைகள், கடிதங்கள், சித்திர விளக்கங்கள், வரலாற்று கட்டுரைகள் ஆகியவை இன்னமும் தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்தாரில்லை. மக்களுக்கும் அறியத் தரப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமே!
தனது குறுகிய வாழ்நாளில் அவர் நிகழ்த்தி சென்ற சாதனைகளை நாம் எட்ட வேண்டுமானால், அதற்கு தெய்வத்தின் கருணை வேண்டும். அத்தனையும் எழுதிக் குவித்திருக்கிறார். ஒருமுறை கவியரசு கண்ணதாசன் ‘பாரதி’ கவிதை தொகுப்பு நூலைக் கையில் வைத்துக்கொண்டு நூலையே பார்த்துக் கொண்டிருந்ததை கண்ணுற்ற அவரது உதவியாளர், அண்ணே! வெகுநேரமாக கையில் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
“அட தம்பி! நான் பல நூல்களை எழுதியுள்ளேன், பாரதி ஒரே தொகுப்புக்குள் உலகையே அடக்கி விட்டான். ஆச்சரியமாக வியக்கிறேன்”! என்றாராம்.
அப்படி எழுதிக் குவித்திருக்கிறார். குறுகிய வாழ்நாளில் இது தெய்வபலம்.
அதுபோலவே, பாரதியின் பாடல்கள் மக்களை கவர்ந்த காரணத்தால் பல திரைப்படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் பாரதியின் கவிதைகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், தமிழ் இலக்கிய உலகின் மெத்தனத்தால் தமிழின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் திரைப் பாடல்களின் பட்டியல் கூட முழுமையாக நம்மிடம் இல்லை என்ற வேதனை இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது!
பாரதியின் வாழ்க்கையில் பொதுவான சில குறிப்புகளை வாசகர்களுக்காக பதிவு செய்கிறேன்.
* எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் ‘பாரதி’ என்ற பட்டம் வழங்கினர்.
* தன்னை ‘செல்லிதாசன்’ என்று அழைத்துக்கொண்டார்.
* தமது ‘பூனூலை’ கனகலிங்கம் என்ற ஆதி திராவிடர் க்கு வழங்கினார்.
* தம் பாடல்களுக்கு தாமே மெட்டமைத்த கவிஞர்.
* 1905ல் ‘சக்கரவர்த்தினி’ என்ற இதழை தொடங்கினார்.
* ‘கர்மயோகி’ – ‘பாலபாரதி’ இதழ்களை நடத்தினார்.
* ‘சுதேசமித்திரன்’ துணை ஆசிரியர்.
* ‘இந்தியா’ இதழின் ஆசிரியர்.
* சென்னை ஜனசங்கம் இதழை நடத்தினார்.
* சகோதரி நிவேதிதாவை சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்.
* இவரின் ‘ஞானகுரு’ சகோதரி நிவேதிதா தேவி.
* இவரின் ‘அரசியல் குரு’ லோகமான்ய திலகர் இவர்.
* அறிந்த மொழிகள் 14 ஆகும்.
அடுத்த இதழில் இத்தொடர் நிறைவு பெறும்
வீணை மைந்தன்.













