LOADING

Type to search

சினிமா

தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்கள்…….

Share

வீணை மைந்தன் – இறுதி அத்தியாயம்

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – அது முடிந்த பின்னாலும் என் பெயர் இருக்கும்” என கவிஞர் வாலி ஐயா அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் – க்காக தெய்வத்தாய் படத்தில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

இன்றும் மக்கள் திலகம் பேசப்பட்டு வருகிறார்; நினைக்கப்படுகிறார். ஏழைகள் நெஞ்சில் வணங்கப்படுகிறார்.

அதே போன்று ‘பாரதி’ என்ற மூன்று எழுத்துக்குரிய ஒரே ‘மகாகவி’ என்றென்றும் நினைக்கப் படுவார்; வணங்கப் படுவார், என்பதில் ஐயமில்லை. தமிழ் தாய் தத்தெடுத்த மகா சொத்து. அவரே தாய்மொழிக்கு முத்து!

மகாகவி பாரதி ஐயாவின் 100வது நினைவு ஆண்டில் நானும் அவர் நினைவாக ஏதாவது எழுதவேண்டும் என்ற தமிழ் ஆர்வத்தில் இத்தொடரை எழுதி அவர் திருப்பாத கமலங்களில் காணிக்கையாக்கி உள்ளேன் என்பதில் ஒரு திருப்தி. மேலும் தமிழ் சினிமாவில் பாரதியாரின் பாடல்களும், கவிதைகளும் இடம் பெற்ற சில படங்களை நினைவு கொண்டு பதிவு செய்துள்ளேன். அவ்வப்போது சில படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ‘மகாகவி’ எழுதிய பாடல் வரிகளும் சேர்த்து எழுதப்பட்டுள்ளதையும் காண்கிறேன். உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் கமலஹாசன் அவர்கள் ஒரு பாடகராக மேடையில் தோன்றி தனது முன்னாள் காதலி ஸ்ரீபிரியாவை பார்த்து பாடுவார். அவர் பாடும் பாடலில் பாரதி ஐயாவின் ‘கண்ணம்மா என் காதலி’ இல் எழுதிய வரிகள் சில இடம்பெறும்.

“…வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…!
பார்த்த இடத்திலெல்லாம் – உன்னைப் போலவே
பா வை தெரியுதடி…” தொடர்ந்து கமல் அவர்கள் ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு… என ஸ்ரீபிரியாவுக்குக் கேள்விக்கணை தொடுப்பார்.!

இயக்குனர் ‘மணிரத்னம்’ தன்னுடைய இரு படங்களுக்கு பாரதி ஐயாவின் கவிதை வரிகளில் இடம்பெற்ற சொற்றொடர்களையே படத்தின் தலைப்பாக வைத்திருந்தார். அவருடைய படங்களான கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘காற்றுவெளியிடை’ ஆகியவை உதாரணமாகிறது.
வேறு சில படைப்புகளையும் பார்ப்போம்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” (1959)
‘கண்ணம்மா என் காதலி’ 1945
பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ (இத்தலைப்பில் இருதடவை)
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ 1960
‘கண்ணன் என் காதலன்’ 1968
‘தீராத விளையாட்டுப் பிள்ளை’
‘எங்கிருந்தோ வந்தான்’
‘ஓடி விளையாடு பாப்பா’ 1959.
‘வெந்து தணிந்தது காடு
‘சூரரைப் போற்று
‘இவ்வாறு பல படங்களின் தலைப்பு பாரதி ஐயாவின் பாடல் வரிகளையே நினைவூட்டுகிறது.

ஏபி நாகராஜன் ‘நவராத்திரி’ படத்தில் ஓரிடத்தில் சாவித்திரியின் மனநிலையை பிரதிபலிப்பது போல், (பின்னணியில்) “பெண்ணொன்று பூமி தனில் பிறந்துவிட்டால்…” என பாரதியின் பாடல் வரி சேர்க்கப்பட்டிருக்கும்.
இதேபோல் ‘பாயுமொளி நீ யெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு

‘வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு எனும் வரிகளையும் (பெயர் மறந்த திரைப்படத்தில்) கேட்டிருக்கிறேன். ‘நின்னைச் சரணடைந்தேன்’ எனவும் ஒரு பட தலைப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ நூலின் தலைப்பும் பாரதியுடையதேயாகும்!
‘மக்கள் திலகம்’ – சரோஜாதேவி இருவரும் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணன் பிறந்தான்.. எங்கள் கண்ணன் பிறந்தான்..” என்று ஆரம்பிக்கும் பாடலின் இரு வரிகளிலும். அதேபோல் மக்கள் திலகம் நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்திலும் இடம்பெற்ற ‘காதல் என்னும் சோலையிலே ராதே ராதே என்பது மகாகவி எழுதிய வரிகள் ஆகும்!.
இன்னும் துருவித் துருவி ஆராய்ந்தால்… பாரதியின் பல சொற்றொடர்களும்… கவிதை வரிகளும்.. செலுலோயிட் படக் காட்சிகளில் இணைக்கப்பட்டு இருப்பதைக் கண்டறியலாம்.
வாசகர்களே நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.

நிறைவாக பாரதியை ஐயாவின் தமிழ் வீச்சை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ் எழுதும் நண்பர் ஒருவரின் வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட, மறைவுக்குப்பின் பாரதியை சந்தித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்துடன் இத்தொடர் கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
இப்போது அந்த பாரதி மைந்தனே உங்களுடன் பேசுகிறார். இதோ அவரின் வாக்குமூலம்…
“…ஏறக்குறைய 10 தடவைகளுக்கு மேலாக பாரதம் சென்று வந்திருப்பேன். ஒரு தடவையாவது மகாகவி பாரதி பிறந்த மண்ணான எட்டயபுரத்தையோ, புலம்பெயர்ந்து வாழ்ந்த புதுச்சேரியையோ மிதிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.

1996ஆம் ஆண்டு ஒரு முக்கிய அலுவல் காரணமாக சென்னை செல்ல வேண்டி வந்தது. இடையில் இரு நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகின. என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? என சிந்தித்தேன். மனதில் ஒரு பொறி தட்டியது ‘மகாகவி’ வாழ்ந்த புதுச்சேரிக்கு போவதென்று முடிவு செய்தேன். புதிய இடம், புதிய சூழல் வாடகை வண்டி ஒன்றை அமர்த்திக்கொண்டு ‘குயில்பாட்டு’ எழுதப்பட்ட அந்த சோலைநகருக்கு பயணமானேன்.

பயணம் முழுவதும் என் கவித் தந்தை பாரதி வாழ்ந்த இடத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற மனோவேகத்துடன் பயணம் தொடர்ந்தது. புதுச்சேரியை அடைந்ததும் மகாகவி பாரதி வாழ்ந்த இடத்திற்கு போகும்படி சாரதிக்கு ஆணையிட்டேன். அவருக்கு பாரதியை தெரியவில்லை? வழியில் போன ஒருவரிடம் விவரம் கேட்டேன். சரியாக நினைவாலயம் முகவரி தந்தார்.

மிகவும் பழமையான ஓட்டு வீடு. முதியவர் ஒருவர் வீட்டுக் கதவைத் திறந்தார். ‘இது மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடா?’ என்றேன். ஆமாங்க!

‘உள்ளே வரலாமா’?
‘தாராளமா வாங்க’
இரு கதவுகளையும் திறந்து கொண்டே அழைத்தார்.
உள்ளே முதல் அடி வைத்ததும் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.எனது கவிதந்தை வாழ்ந்த இல்லம், அவர் திருப்பாதங்கள் பதிந்த இடம் என்னுள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. சுவரெல்லாம் மகாகவியின் வெவ்வேறு தோற்றங்களை கொண்ட புகைப்படங்கள் மாட்டப்பட்டு இருந்தன. ‘இந்தியா’ பத்திரிகையின் பல்வேறு பிரதிகள். முண்டாசுக் கவிஞன் முறுக்கிய மீசையுடன் அன்னை செல்லம்மாளுடன் சேர்ந்திருந்த அழகான படம். விழுந்து வணங்கினேன். ஒதுக்குப்புறமாக ஒரு சாய்வு நாற்காலியை கண்டேன். அக்கதிரை பற்றி பெரியவரிடம் கேட்டேன்.

‘ஆமாங்க! கவிஞர் ஐயா உட்கார்ந்து இளைப்பாறும் நாற்காலி”
பெரியவர் ‘ஒரு நிமிடம்’ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

இதுதான் தருணம் என்று கவித்தந்தை சாய்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலியில் சற்றே சாய்ந்தேன். அக்கணம் என் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. பிரம்மிப்பு அடைந்தேன். என் கவிதை தந்தை என் உடலை தீண்டியது போன்ற உணர்வு. உடலிலும் உயிரிலும் ஊடுருவியது போல் ஒரு நினைவு. விழிகளை மூடினேன். அந்த மகா புருஷனின் சக்தி என் நாடி நரம்புகள் அத்தனையும் தீண்டி நேராக என் நெற்றியின் மத்தியில் புடைத்து வினோதமான உணர்வு. அவருடைய வீரமும், துணிவும், கோபமும் என்னுள் புகுந்து போலும் வியப்பில் ஆழ்ந்தேன்.

எனது கவித்தெய்வம் என்னை ஆட்கொண்டு விட்டது என ஆனந்தம் கொண்டேன். என் விழிகள் பனித்தன. மூச்சு சூடானது.!
பெரியவர் வரும் காலடி ஓசை கேட்டதும். சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தேன். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. எழுதிய என்னுயிர் கவித்தந்தை . தமிழ்த் தாயின் தவப் புதல்வன் என்னுள் புதிய சக்திஒன்றைப் பாய்ச்சியது போன்று மெற்சிலிர்த்தேன்.
பெரியவர் என்னைப் பார்த்து. ‘” ஏன் சார் அழுகின்றீர்கள்? என்றார்.
“என் தந்தையை நினைத்தேன். அழுதேன் என்றேன்.'”
சில நிமிடங்கள் மௌனித்து மோன நிலையில் ஆழ்ந்தேன். என் கவித்தந்தையின் உடல் தான் மறைந்தது. அவர் மகத்துவம் என்றும் மறையாதது. நினைவாலயத்தை விட்டு துணிவுள்ள தமிழனாக என் தந்தையின் மிடுக்குடன் வெளியே வந்தேன்.
எனது இலக்கியத் தோழர் கவிஞர் செகப்பிரியன் ஶ்ரீகாந்தின் அனுபவம் இன்றும் என்னுள் செறிந்துள்ளது.

‘வாழ்வு பெருக்கும் மதியே சக்தி! மாநிலம் காக்கும் மதியே சக்தி!
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி! சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி!
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி! விண்ணை அளக்கும் விரிவே சக்தி!
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி! உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி!

பாரதியின்;இந்த அற்புதமான கவிதை வரிகளோடு இந்தத் தொடர் நிறைவடைகின்றது- வீணைமைந்தன்