LOADING

Type to search

உலக அரசியல்

இலண்டனில் பேராசிரியர் முனைவர் சங்கரநாராயணனுக்கு “சேக்கிழார் சீர் பரவுவார்” விருது!

Share

தமிழகத்தின் பிரபல பேச்சாளரும், ஆன்மீக ஆய்வாளருமான பேராசிரியர் முனைவர் திரு.வே.சங்கரநாராயணனனுக்கு இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் ” சேக்கிழார் சீர் பரவுவார்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் உள்ள புகழ் பெற்ற ஆலயம் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலயம். கடந்து 30 ஆண்டுகளாக பிரித்தானிய மண்ணில் ஆன்மீக சேவையாற்றி வரும் இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பு இதன் மனித நேயச் செயல்பாடுகள் தான். ஆண்டுதோறும் தனது நிகர வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை இலங்கையின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற சமூக நலப் பணிகளுக்காக வழங்கி வரும் இந்த ஆலயம் இதுவரை ஏறத்தாழ 150 கோடி இலங்கை ரூபாய்களை தாயகத்திற்கு வழங்கி தனிச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 25 நாட்கள் நடைபெறும் இந்த ஆலயத்தின் ஆடித் திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடித் தேர் வடம் பிடிப்பதும், பிரித்தானிய வீதிகளில் அம்மன் வலம் வருவதும் பக்திப் பரவசமூட்டும் நிகழ்வுகளாகும். இந்த ஆண்டு நடைபெற்ற இந்த ஆடித் திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் பேராசிரியர் முனைவர்.வே.சங்கரநாராயணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 20 நாட்கள் ஆன்மீகத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெற்ற இச் சொற்பொழிவில் திரு.சங்கரநாராயணன் பக்தி, ஆன்மீகம் குறித்த வியப்பூட்டும் பல செய்திகளை விளக்கினார்.

ஒவ்வொரு நாளும் அவரது உரையினைக் கேட்க மக்கள் பெருமளவில் வருகை தந்தனர். ஜூலை 22 முதல் ஆகஸ்டு 12 வரை நடைபெற்ற இந்த நிகழ்வின் நிறைவு நாளில் கோவில் அறங்காவலர் சபையும், நிர்வாக சபையும் திரு.வே.சங்கரநாராயணனின் ஆன்மீகப் பணிகளைப் பாராட்டி “சேக்கிழார் சீர் பரவுவார்” என்ற விருதினை வழங்கி கெளரவித்தது. தனது பாராட்டுரையில் ஆலயத் தலைவர் திரு. யோக நாதன் ” சைவத் திருமுறைகளில் 12ம் திருமுறையை அருளிச் செய்தவர் சேக்கிழார் பெருமான். 63 அடியார்களின் அருள் வரலாற்றைக் கூறும் அற்புத நூல் பெரியபுராணம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரிய புராணத்தில் நீண்ட நெடும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர் திரு. சங்கரநாராயணன். அதில் முனைவர் பட்டமும் பெற்றவர் அவர். இன்றும் உலக நாடுகளில் எல்லாம் பெரிய புராணத்தைப் பேசி வரும் அவர், இணையத்திலும் பெரியபுராண வகுப்புகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார். நானும் அந்த வகுப்பில் அவருடைய மாணவன் தான். நமது அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்து, இருபது நாட்கள் பெரியபுராணம் குறித்த பல வியப்பூட்டும் விடயங்களை நமக்கு விளக்கிச் சொல்லியும், நமது ஐயங்களுக்கு விடை அளித்தும் தொடருரை நிகழ்த்திய அவருக்கு “சேக்கிழார் சீர் பரவுவார்” என்ற சிறப்பு விருதினை ஆலயத்தின் சார்பாக வழங்கி கெளரவிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை நிகழ்த்திய திரு.வே.சங்கரநாராயணன் தனது ஏற்புரையில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மனித நேயப் பணிகளை பாராட்டினார். தாயகத்தின் பணிகளுக்காக 150 கோடி ரூபாய்களையும் தாண்டி தொடர்ந்து உதவி வரும் ஒரு முன்னணி ஆலயமாக இது திகழ்வது மகிழ்ச்சியூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ” அன்பையும், விருந்தோம்பலையும் அகிலத்தில் விதைத்தவர்கள் ஈழத் தமிழர்கள் தான். வீட்டில் ஒரு படுக்கையறை இருந்தாலும் அதை விருந்தினருக்குக் கொடுத்து விட்டு, கூடத்தில், தரையில் படுக்கும் விருந்தோம்பல் பண்பை ஈழத் தமிழிரிடம் மட்டுமே காண முடியும். அவர்கள் காட்டி வரும் அந்த அன்பு கடவுளுக்கு சமமானது. அதற்கு என்றும் நான் நன்றிக் கடன் பட்டவன். பெரிய புராண ஆய்வுக்காக தமிழகப் பல்கலைக் கழகம் தந்த பட்டத்தை விட இந்த ஆலயம் எனக்குத் தந்த பட்டத்தை நான் பெரிதாக மதிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிரித்தானியத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் திருவாசக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்ற பேராசிரியர் சங்கரநாராயணன், தனது அறுபது நாட்கள் பிரித்தானியப் பயணத்தில், ஈஸ்தம் சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம், இல்போர்டு செல்வ விநாயகர் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம், உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், இலண்டன் முருகன் ஆலயம், காசி விசுவநாதர் ஆலயம், மனோபார்க் தமிழ்ப் பள்ளி, போன்ற பல்வேறு இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.