எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் மறைந்துவிட்டார்
Share
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88வது வயதில் மறைந்துவிட்டார்.
தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப் 16 பெப்ரவரி 1934 இல் பிறந்தவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்தவர்.
தெளிவத்தை ஜோசப் தனது பெயருடன் ஒட்டிக் கொண்டுள்ள பிராந்தியம் கடந்து; நாடு கடந்து; தமிழ் உலகம் அறியும் எழுத்தாளராக உலா வந்துகொண்டிருந்தவர்.
அவர் ஓர் எழுத்தாளராக மாத்திரமன்றிஇ குரும்பசிட்டி கனக செந்திநாதனுக்குப் பின்னர் இலங்கை தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறார் என்று மறைந்த கே.எஸ்.சிவகுமாரன் பதிவிட்டுள்ளார்..
மலையகத் தோட்டப்புற வாழ்வியலின் அழகியலைச் சிறுகதைகளாக வடித்துச் சிறந்து விளங்கிய என்.எஸ்.எம்.ராமையாவிற்குப் பின்னர்,அந்த வாழ்வியல் அனுபவங்களைத் தமது படைப்புகள் மூலம் கொண்டு வந்து பிரதேசம் கடந்தும் சிறந்த படைப்பாளியாகக் கருதப்படுபவர் ஜோசப்.
‘இலங்கையில் கலாசார அமைச்சும் சாகித்திய மண்டலமும் 1966இற்குப் பின்னரே ஸ்தாபிக்கப்பட்டன. அதுவரை அநேகமான சிங்கள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தமிழ் இலக்கியம் என்றால், அஃது இந்திய தமிழ் இலக்கியத்தின் ஓர் அங்கம் எனக் கருதினார்கள். அதனால்,தமிழ் இலக்கியத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் சிற்றன்னையின் பார்வையைச் செலுத்தி வந்தனர்‘ என்கிறார் சிவகுமாரன். ஆனால், அதற்குப் பின்னர் நிலைமை மாற்றம்பெற்று வளர்ச்சியடைவதற்கு ஜோசப் போன்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றால் மிகையில்லை.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் மத்திய,மாகாண அரசுகளின் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். ஊவா மாகாண சாகித்திய விருது, இந்து கலாசார திணைக்களத்தின் இலக்கிய செம்மல் விருது, அரசின் கலாபூசண விருது, தேசிய சாகித்திய விருது,பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் ஒன்றியத்தின் விசேட விருது, கம்பன் கழக விருது, யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, மட்டக்களப்பு இலக்கிய மன்றத்தின் விருது, மத்திய மாகாண சாகித்திய விருது, மேல் மாகாண சாகித்திய விருது, கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளன.
சென்னை இலக்கிய மாநாடு, கனடா புத்தகக் கண்காட்சி, அவுஸ்திரேலியா, பிரித்தானியா நாடுகள் உள்ளிட்டவற்றில் பேச்சாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.
இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப் இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை,வசனம் எழுதியுள்ளார்.
அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.













