பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது
Share
பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் காரணமாக சில வாரங்கள் மத்திய கிழக்கில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, கடந்த சில வாரங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டு அமைதி நிலவி வந்தது. மேலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக இரு தரப்பும் கூறி வந்தன. ஆனாலும், ஈரான் மீது அமெரிக்கா கடந்த 3ம் தேதி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹர்முஸ் ஜலசந்தி அருகே குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த தாக்குதல் வான்பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து ஈரான் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில், பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலை பஹ்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் முறியடித்தது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.













