ரிஷி சுனாக் : பிரிட்டிஷ் ஜனநாயகத்தில் புதிய பரிமாணம்
Share
சிவா பரமேஸ்வரன்: மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனாக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதிலிருந்தே நாடு குழப்பமான அரசியல் சூழலை எதிர்கொண்டது. அந்த ஒன்றியத்திலிருந்து விலகிவிட்டால் பொருளாதார ரீதியில் பிரிட்டன் பெரும் ஆதாயங்களைப் பெறும், இதர நாடுகளின் நலன்களுக்கான பிரிட்டன் செலவிடும் மில்லியன் கணக்கான ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் மிச்சமாகும், பிரிட்டிஷ் வர்த்தகம் மேலும் பெருகும், உள்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு மேம்படும், நோயாளர்களுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்கும், ஐரோப்பிய சட்டங்கள்-அதிலும் குறிப்பாக மனித உரிமைச் சட்டங்கள் பிரிட்டனைக் கட்டுப்படுத்தாது என்று `உண்மைக்குப் புறம்பான` பல தகவல்கள் கூறப்பட்டு மக்கள் அதற்கு வாக்களித்தார்கள் என்கிற குற்றச்சாட்டு அதை முன்னெடுத்தவர்கள் மீது இன்றளவும் உள்ளது.

யதார்த்த ரீதியில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பிரிட்டன் பின்னடைவையே சந்தித்துள்ளது என்பது. போரிஸ் ஜான்சன், நிஜேல் ஃபராஜ், மைக்கேல் கோவ் போன்றவர்கள் `சுயநல நோக்கத்தோடு` முன்னெடுத்த பிரெக்சிட் திட்டத்திற்கு ஆதரவளித்தவர் புதிய பிரதமரான ரிஷி சுனாக். அவருக்கு முன்னாதாக பிரிட்டிஷ் சரித்திரத்திலேயே மிகவும் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் அம்மையார் முதலில் பிரெக்சிட்டிற்கு எதிராகவும், பின்னர் ஆதரவாளராகவும் மாறியவர்.
பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று முதலில் போர்க்கொடியை உயர்த்தி பதவியிலிருந்து விலகியவர் அப்போது அவரது நிதியமைச்சராக இருந்த ரிஷி. அவருடன் மற்றொரு மூத்த அமைச்சராகவும் இருந்த சாஜித் ஜாவிதும் சேர்ந்து கொண்டார். பின்னர் நடைபெற்றதை நாடே அறியும்.
பிரெக்சிட் வாக்கெடுப்பை நடத்தி அதில் தோல்வியை எதிர்கொண்ட டேவிட் கேமரன் பதவி விலக நேரிட்டது. பின்னர் தெரீசா மே அம்மையார் பிரதமரானார். அவர் பிரெக்சிட்டிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றாலும், மக்கள் தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டிய சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் பதவி விலக வேண்டிய நிலைக்கு ஆளானார். இதையடுத்து பழமைவாத அல்லது மரபுவாத கட்சியின் தலைமைப் பொறுப்பையும், பிரதமர் பதவியையும் `கோமாளி` என்று வர்ணிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் ஏற்றார். கட்சிக்குள்ளேயும் வெளியிலும் கடும் எதிர்ப்பை சந்தித்த அவரும் அடுத்து பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிறகு நடைபெற்ற தலைமைப் பதவிக்கான தேர்தலில் இந்நாள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் களத்தில் இறங்கினர். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலான வாக்கெடுப்பில் ரிஷி சுனாக் முதலிடத்தில் இருந்தாலும், கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் லிஸ் டிரஸ் வெற்றிபெற பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இனவாதம் இழையோடியதைக் காண முடிந்தது. ஆனால் அந்த ஆட்சி 50 நாட்கள் கூட நீடிக்கவில்லை.

ஆட்சி கவிழ்ந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி எழ, பலரை பதவி மோகம் ஆட்டிப் படைத்தது. அதில் முதன்மையாக இருந்தவர் ரிஷி சுனாக். கடந்த முறை நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டவர் இம்முறை கட்சி மற்றும் ஆட்சியின் தலைமையைப் பெறுவதில் உறுதியாக இருந்தார். அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கீழவை-ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்- அவைத்தலைவர் பென்னி மொர்டாண்ட் முதல் ஆளாக தான் போட்டியில் உள்ளதாக அறிவித்தார். அவருக்கான ஆதரவு எதிர்ப்பார்த்தளவில் இல்லாத நிலையில், இதுவே சரியா தருணம் என்று காய் நகர்த்தினார் ரிஷி. உட்கட்சியில் அவருக்கு இருந்த ஆதரவு காரணமாக தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி பெருகிக் கொண்டே வந்தது. பென்னி மோர்டாண்ட்டிற்கான ஆதரவு மந்தமாகவே இருந்தது.
பதவி ஆசை யாரை விட்டது என்ற கதையாக, பதவியிலிருந்து நிலைக்கு தள்ளப்பட்ட போரிஸ் ஜான்சன், கரீபியன் தீவுகளில் தனது விடுமுறையை முடித்துக் கொண்டு நாடு திரும்பி நானும் போட்டியில் உள்ளேன் என்று அறிவித்தார். அவரது ஜால்ரா கூட்டங்களும் அதை வரவேற்றன. பிரெக்சிட் விஷயத்தில் அவருடன் நின்றவர்களும், அவர் முன்னர் பிரதமராவதற்கு துணை நின்றவர்களும் கூட இம்முறை அவருக்குத் துணையாக இருக்கவில்லை. வெற்றி பெற வாய்ப்பில்லை என்றவுடன் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். கட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட தேவையான 100 உறுப்பினர்களின் ஆதரவை பென்னியால் பெற முடியாமல் போக, ரிஷி சுனாக் போட்டியின்றி கட்சித் தலைவரானார், அதையடுத்து பிரதமர் பதவியும் அவருக்கு கிட்டியது.
இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்துடன் இப்போது பிரிட்டனில் நடைபெற்றுள்ளதை தொடர்புபடுத்திப் பார்க்க இயலும். இந்த ஆண்டு தொடக்கம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், அதையடுத்து உருவான பொருளாதார நெருக்கடிகள், அதன் காரணமாக `போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு` ஆளான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறு சிங்கப்பூரிலிருந்து பதவி விலகல் கடிதத்தை அனுப்பும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் தம்பி கோத்தாபய ஆட்சியில் தமையன் மஹிந்த பிரதமராக இருந்த நிலையில், அவரும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை அடுத்து பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
`ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்` என்ற பழமொழிக்கு ஏற்ப சிங்களக் கட்சிகள் மற்றும் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாத சூழலில், `ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை` என்ற கதையாக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றார். அரசியலில் தன்மானம், சுயகௌரவம், நேர்மை, நீதி, சத்தியம் தர்மம் இதற்கெல்லாம் இடமில்லை என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.

அந்த சமயத்தில் ராஜபக்சக்களுக்கு தம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு பலி ஆடும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ரணிலுக்கு ஒரு பதவியும் தேவைப்பட்டது. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருந்திப் போக ரணில் பிரதமரானார். கோத்தா ராஜிநாமா செய்ய, பின் வாசல் வழியாக ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க. அதாவது நேரடியாகத் தேர்தலைச் சந்தித்து மக்கள் ஆணையைப் பெறாமல், எந்தக் கட்சியை எதிர்த்து அவர் அரசியல் செய்தாரோ அதே கட்சியின் `பினாமி` வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜனாதிபதியானார் ரணில்.
தனது சொந்த தேர்தல் மாவட்டமான கொழும்பில் தோல்வியடைந்து, விகிதாச்சார அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் வேறு யாருக்கும் கிடைத்துவடக் கூடாது என்பதில் குறியாக இருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தன்னையே அந்தப் பதவிக்கு நியமித்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் தான் `நரி` என்று சிங்கள மக்களாலேயே அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க.
ரிஷி சுனாக்கும் யதார்த்தமாக நோக்கினால், பின் வாசல் வழியாக பதவிக்கு வந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, அக்கட்சியையும் தமது பதவிகளையும் காப்பாற்றிக் கொள்ளவே அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிஷியை ஆதரித்தனர் என்று மூத்த செய்தியாளர்களும் மற்றும் நாடாளுமன்ற வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. ரிஷி சுனக்கின் கருத்துக்களும் அதையொட்டியே இருந்தன என்பதையும் மறுக்க முடியாது. கட்சியை ஒற்றுமைப்படுத்தி அடுத்த தேர்தலுக்கு (2024) தயார்ப்படுத்த வேண்டிய தேவையுள்ளது அதுவே எனது தலையாய நோக்கம் என்று புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக் கூறியுள்ளார்.
அடுத்து 2024 ஆண்டோ அல்லது அதற்கு முன்னரோ நடைபெறக் கூடிய பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்று இப்போதே கருத்துக்கணிப்புகள் கூற ஆரம்பித்துவிட்டன. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் இப்போதுள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சிக்குள் இப்போது நீறு பூத்த நெருப்பாகவுள்ள `ஒற்றுமை` நிலைக்குமா என்ற கேள்விகள் உள்ளன.
இலங்கையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரணில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்திக்கும் அதே வகையான நெருக்கடியை ரிஷி சுனாக்கும் சந்திக்கிறார். பிரிட்டிஷ் நாணயமான ஸ்டர்லிங் பவுண்ட்ஸ் தொடர்ந்து தளும்பல் நிலையிலேயே உள்ளது. அமெரிக்க டாலர் மற்றும் யூவோவிற்கு எதிராக அந்து எந்தளவிற்கு ஸ்திரப்பட்டு பின்னர் உயரும் என்பதற்கு உடனடியாக விடை இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரத்திலுள்ள குறைபாடுகள் மற்றும் ஓட்டைகளை சரி செய்து முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் விட்ட பிழையைச் சரி செய்ய தான் தீவிரமாகச் செயல்படவுள்ளதாக ரிஷி சுனாக் கூறுகிறார். உள்நாட்டில் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி புதிய ஆட்சிக்கு வழிகோலப்பட வேண்டும் என்று தொழிலாளர் கட்சியும், தாராளவாத ஜனநாயக கட்சியும் (லிபரல் டெமாக்ரட்ஸ்) வலியுறுத்துகின்றன. பொதுத் தேர்தல் விரைவாக நடைபெற்றால் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறாது என்பது அவர்களின் நம்பிக்கை. இலங்கையிலும் ரணிலின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு-2024 நவம்பர் வரை மட்டுமே. அங்கும் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் காத்திரமான ஒரு ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.
ஆனால் இரு நாடுகளிலும் இப்போதுள்ள சூழலில் தேர்தல் நடைபெற்றால், ஆளும் தரப்பில் பெரும்பாலானவர்கள் தோல்வியைத் தழுவும் வாய்ப்பே அதிகம் என்பதால் நாடாளுமன்றத்தை கலைப்பதில் தயக்கம் உள்ளது. இருந்தாலும் ரிஷி சுனாக்கின் தேர்வில் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று அறியப்படும் பிரிட்டனில், வெள்ளையர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியும்.

ரிஷி சுனாக் அடிப்படையில் ஒரு பிரிட்டிஷ்காரர். அதாவது பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்று அரசியலிற்கு வந்தவர். அவர்களது பெற்றோர் ஆப்ரிகாவில் பிறந்தவர்கள். தந்தை கென்யாவிலும் தாய் தான்சானியாவிலும் பிறந்தவர்கள். ரிஷியின் தாய் தந்தை ஆகிய இருவழி தாத்தா பாட்டியும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அரச பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரச பணிக்காக ஆப்ரிக்கா சென்றவர்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் நாடு தொடங்கி பஞ்சாப் வரையில் ரிஷி சுனாக் என்னவோ திருச்சியிலோ அல்லது ஜலந்தரிலோ பிறந்து கடந்த ஆண்டு தான் பிரிட்டன் சென்று அந்நாட்டிற்கே பிரதமர் ஆகிவிட்டது போன்று குதூகலிக்கின்றனர்.
இதே போன்றதொரு அர்த்தமற்ற ஆர்ப்பரிப்பு கமலா ஹாரிஸ் அம்மையார் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்வான போதும் நடைபெற்றது. எப்படி கமலா ஹாரிஸ் அமெரிக்க நலன்களையே முன்னிலைப்படுத்திச் செயல்படுவாரோ அதே போன்று ரிஷ் சுனாக்கும் பிரித்தானிய நலன்களையே முன்னிலைப்படுத்துவார், அதைத்தான் அவர் செய்யவும் வேண்டும். அதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவிலுள்ளவர்கள் உளறுவது அறியாமையின் உச்சக்கட்டம். தமிழ்நாட்டிலுள்ள ஒரு விஸ்வகர்மா சங்கத்தினர் அவரை பாராட்டி அடித்துள்ள விளம்பரங்கள் இன்னும் அபத்தமானவை.
எனினும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு பிரிட்டனில் வெள்ளையர் அல்லாத ஒருவர் நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கும் வர முடிந்துள்ளது. ஆனால் இலங்கையில் சிங்களவர் அல்லாத ஒருவர் நாட்டின் உயர் பதவி அல்ல, இரண்டாவது மூன்றாவது நிலையிலுள்ள பதவிக்கு கூட வர இயலாது. இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு எழுதப்படும் போது அப்படியான ஒரு வழிமுறை இருக்க வேண்டும்.













