‘துருக்கி போல் இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்’ நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை
Share
ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்கள் நாட்டை பாதுகாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையற்ற விடயங்கயில் ஈடுபடவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
துருக்கி& சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. சுமார் 20 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.
இந்த நிலையில், துருக்கி&சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, ஆலந்து அல்லது நெதர்லாந்து நாட்டின் ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார்.
புவியியல் ஆராய்ச்சியாளரான பிரான்க் ஹூகர்பீட்ஸ். புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்” என்று கூறி இருந்தார்.
அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அவரது இந்த பதிவு வைரலாகியுள்ளது.
இதற்கிடையே அவர் இந்தியா, பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
துருக்கியில் இந்த அளவுக்குப் பேரழிவு ஏற்படுவதை முன்கூட்டியே கணித்தவர் என்பதால் இணையத்தில் இது பேசுபொருளாகியுள்ளது. நாம் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் நிலநடுக்கங்களை எல்லாம் முன் கூட்டியே கணிக்க முடியாது என்றும் இவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.













