தந்தை செல்வநாயகம் – நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும்!
Share
கனடா நக்கீரன்
(மார்ச் 31, 2023 தந்தை செல்வநாயகம் அவர்களது 125 ஆவது பிறந்த நாள்)
தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அமைதிவழிப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் அமைதிவழிப் போராட்டம். அதாவது மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம்.
அமைதி வழிப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் நாட்டின் பிரதமராக இருந்த டிஎஸ் சேனநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்ட 18 ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்று 285 நாட்களுக்குள் (ஓகஸ்ட் 20, 1948) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதனைத் தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்துப் பேசியதோடு நில்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தார். இந்தச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நொவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் ஒருவர் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு அவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.
இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தினால் எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். 1946 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் படி மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,600 (11.73%), இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை 733,700 (11.02%) ஆக மொத்தம் 1,524,300 (22.75 %). 2012 இல் மலையகத் தமிழரின் எண்ணிக்கை 842,323 (4.16%) இலங்கைத் தமிழர் 2,270,924 (11.21%) ஆக இருந்தது. இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்றது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இலங்கைக் குடியுரிமைச் சட்டம் புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் பிரதமர் டிஎஸ் சேனநாயக்க அவர்கள் மலையகத் தொழிலாளர்களது குடியுரிமையைப் பறித்து, அதன் மூலம் அவர்களது அரசியல் பலத்தைக் குறைத்து, அவர்களை நாடற்றவர்களாக ஆக்குவதே அவரது உள்நோக்கமாக இருந்தது.
சோல்பரி அரசியல் யாப்பு இயற்றப்பட்ட போது இலங்கையின் குடியுரிமை பற்றி அதில் ஒன்றும் சொல்லப்படவில்லை. தந்திரசாலியான டிஎஸ் சேனநாயக்கா நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் தீர்மானிக்கும் எனச் சோல்பரி பிரபுவிடம் சொல்லிவிட்டார். தமிழர் தரப்பும் அதனை வலியுறுத்தவில்லை.
தந்தை செல்வநாயகம் 1944 இல் தொடக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அதன் தலைவர் ஜிஜி பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார். இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நொவெம்பர் 15 இல் சட்டமாகியது. ஆனால் அதற்கு முன்னரே செப்தெம்பர் 03 ஆம் நாள் பொன்னம்பலம் டிஎஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இது குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு டிஎஸ் சேனநாயக்கா அவர்களோடு பேரம் பேசத் தொடங்கிவிட்டார் என்பதைக் காட்டி நிற்கிறது.
பொன்னம்பலம் 1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,100 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றிபெற்றார். “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. காரணம் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் மகாதேவா அப்போது உள்நாட்டு அமைச்சராக இருந்தார். காவல்துறை அவரது அமைச்சின் கீழ் இருந்தது. ஊர்வலமாக வந்த வேலை நிறுத்தக்காரர்கள் மீது காவல்துறை சுட்டதில் எழுதுவினைஞர் கந்தசாமி உயிர் துறந்தார்.
மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்குத் துணைநிற்பேன் என்று எழுத்தில் மலைகய மக்களது தலைவர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கையை பொன்னம்பலம் மீறினார். குடியுரிமை பறிக்கப்படுவதால் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநித்துவம் பாதியாகக் குறையும் என்பது பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தைச் சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டிஎஸ் சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை என்பதே உண்மை.
அடுத்த ஆண்டு 1949 இல் நாடாளுமன்ற தேர்தல் (திருத்தம்) சட்டத்தில் (Parliamentary Elections (Amendment) Act of 1949) ஒற்றைவரித் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத் தமிழர்களது வாக்குரிமையையும் டி.எஸ். சேனநாயக்கா பறித்தார். ஏற்கனவே (1948) அமைச்சரவையில் அமைச்சராகச் சேர்ந்துவிட்ட பொன்னம்பலம் இந்தச் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் “இன்று மலைநாட்டுத் தமிழர்களது கழுத்துக்குக் கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழிபற்றி முடிவு செய்யும் நேரம் வரும்போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” (“Today the knife has fallen on the neck of hill country Tamils. The same fate will befall the Sri Lankan Tamils tomorrow when the time comes to decide on the official language”) எனத் தீர்க்கதரிசனத்தோடு பேசினார். 1956 ஆம் ஆண்டில் திரு. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தீர்க்கதரிசனம் உண்மையாகியது. பதவி ஆசை காரணமாக பொன்னம்பலத்துக்கு இப்படியான தீர்க்கதரிசனம் அடியோடு இருக்கவில்லை.
மலையகத் தமிழரை சிங்கள ஆளும் வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுத்த பொன்னம்பலத்தின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலை எதிர்க்கு முகமாகத் தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். வெளியேறி 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் நாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், வட – கிழக்கு (மாகாணங்கள்) அவர்களது பாரம்பரிய தாயகபூமி, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஒழித்து விட்டு கூட்டாச்சி (federal) அரசியல் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தன்னாட்சி அரசை நிறுவுவது தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் இலட்சியம் எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. வட- கிழக்கில் சிங்கள அரசின் ஆதரவுடன் இடம்பெறும் பாரிய சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதென்பது அந்தக் கட்சியின் அடுத்த முக்கிய குறிக்கோளாக இருந்தது.
தமிழ் அரசுக் கட்சியின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது நீண்ட தலைமை உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“சென்ற காலங்களில் எமது தலைவர்களின் உறுதியற்ற நிலையே எமது பலவீனத்துக்குக் காரணமாக இருந்தது. இக் குறையை நிவர்த்தி செய்தாலன்றி எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப் போல சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை ‘பதவி ஏற்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமும் இருத்தலாகாது.”
“In the past, our weakness was due to the (political) instability of our leaders. Unless we rectify this weakness, our party will also fail. The party needs trustworthy members who will pledge ‘we will not accept ‘office’ like the Irish nationalists until we establish an independent Tamil state.”
ஒரு அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு 8 இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை இரண்டும் பறிபோவதற்கு ஜிஜி பொன்னம்பலம் காரணகர்த்தாவாக இருந்ததை மனதில் இறுத்தித்தான் தந்தை செல்வநாயகம் இவ்வாறு கூறினார் என்பது வெள்ளிடமலை. எழுபதுகளில் இருதுருவங்களாக இருந்த இரு தலைவர்களும் ஒற்றுமைப்பட்டது வரலாறு.
தமிழ் அரசுக் கட்சியின் கொடியாக யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களது இடபக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் முதல் கூட்டம் முத்திரைச்சந்தை மைதானத்தில் நடந்தது. அதில் இடபக் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கலந்து கொண்டது இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. அப்போது நான் கல்லூரி மாணவன். பின்னர் இடபக் கொடி மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது.
இன்றைய இயைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தந்தை செல்வநாயகம் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் முதல் முதல் அவரை மேடையில் பார்த்த போது மெல்லிய ஆனால் நெடுத்த உருவம், நேர்க்கோடு வகுத்து வாரிய தலை, கவர்ச்சிகரமான முகம், சந்தண நிறம், பட்டு வேட்டி, பட்டுச் சால்வை, பட்டுச் சட்டை. ஆகிவற்றோடு காட்சி அளித்தார். வயது அய்ம்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை குன்றாத தோற்றம்.
அய்ம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் தமிழரசுக் கட்சி மேடைகளில் தோன்றிய தந்தை செல்வநாயகம் அவர்களின் இந்தக் கம்பீரமான தோற்றத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளமை குன்றி, முதுமை எய்தி, நடை மெலிந்து, மேடைகளிலும் சரி, நேரிலும் சரி, ஒவ்வொரு சொல்லாகத் தட்டுத் தடுமாறி மெல்லிய குரலில் பேசும் தந்தை செல்வநாயகம் அவர்களைத்தான் பலர் பார்த்திருப்பார்கள். அவரைப் பீடித்த பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease) தந்தை செல்வநாயகம் அவர்களின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தது.
இதனால் போலும் தந்தை செல்வநாயகம், 1972 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தந்தை பெரியாரைத் சந்தித்துக் கொண்டபோது தன்னைவிட வயது குறைவாக இருந்தும் தன்னைவிட மூப்பாகத் தெரிகிறார் என்று பெரியார் சொல்லிக் கவலைப் பட்டார்.
தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948 ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் 8 இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலத்தோடு சமரசம் செய்து கொண்டு போயிருந்தால், அல்லது அவரோடு முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கியிருந்தால், பின்னர் தன்னைத் தேடிவந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு நிச்சயமாக மாலுமி இல்லாத படகு போலத் திசை மாறிப் போயிருக்கும். (மிகுதி அடுத்த வாரம்)