ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; மனு கொடுத்த மறுநாளே தங்கள் ஊருக்கு பஸ் விடப்பட்டதால் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி
Share
ஆலங்குடி மகாஜனம் கிராம மக்கள் கூடுதல் பேருந்து வசதி வேண்டி வைத்த கோரிக்கையை ஒரே நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 9) திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வருகை புரிந்த போது லால்குடி வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள் பேருந்து வசதி வேண்டி நேரடியாகக் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதபற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டார்.
அதன்படி, மறுநாளே அதாவது இன்றே இந்த கிராமத்திற்கு பஸ் விடப்பட்டது.
தினமும் காலை 8 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8.35 மணி மற்றும் மாலை 06.05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கும் என தினசரி 4 நடைகள் இப்பேருந்து சேவை உடனடியாக இயங்கத் தொடங்கின.
இவ்வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொது மக்கள், பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கட்டணமில்லாமல் மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகரப் பேருந்து மூலம் கூடுதலாகப் பேருந்து வசதி இயக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார்.
முதலமைச்சரின் உத்தரவை அடுத்து ஆலங்குடி மகாஜன கிராமத்தில் இருந்து லால்குடிக்கு இன்று புறப்பட்ட முதல் பேருந்திற்குச் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும், வண்ண காகிதங்களை ஒட்டியும், உற்சாகமாக நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியைக் கிராம மக்கள் வெளிப்படுத்தினர். பேருந்தில் ஏறி நின்று பெண்கள் ஆனந்தமாக நடனம் ஆடினர்.
பிறகு அந்த பேருந்தில் சிறியவர்கள், பெரியர்கள் என அனைவரும் ஏறி பயணம் செய்தனர். தங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.













