முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தல்… தயாராக இருக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின் சூசகம்
Share
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய அரசு செய்த சாதனை பட்டியலை வெளியிடுவாரா? என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசும் போது, ’இந்த நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்லப்போனால் தெம்போடு இருமாப்போடு நான் உங்கள் முன் நின்றுகொண்டு உள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன்.
கழகத்திற்கு தொண்டனுக்கு தொண்டனாக இருந்து செயல் வீரர்களுக்கு செயல் வீரராக இருந்து பணியாற்றி வருகிறேன் என்றார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட உள்ளோம். கருணாநிதி நூற்றாண்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற அச்சாரம் இடும் கூட்டம் தான் இந்த கூட்டம். சேலமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதனால்தான் நேரு சேலத்தில் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். சேலத்தில் பெருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் உழைத்திட வேண்டும். இரண்டு ஆண்டுகள் கழகத்தின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி தான் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமித்திருக்கிறோம். பூத் கமிட்டி அமைக்கும் பணியும் முடித்திருக்கிறோம். இது சாதாரண பணி இல்லை. இந்திய அளவில் அல்ல. உலகம் முழுவதும் இது போன்ற கட்சி பணியாற்றும் கட்சி வேறு கட்சி இல்லை. தொடர்ந்து உழைக்கிறீர்கள்… தொடர்ந்து உழைப்பீர்கள்…
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பக்கம் கட்சியின் வளர்ச்சி மாநிலத்தின் வளர்ச்சி பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் இரண்டு கண்களாக கருதி செயல்பட வேண்டும் என்றார். அடுத்த ஆண்டு தானே நாடாளுமன்றத் தேர்தல் என லேசாக இருந்து விடக்கூடாது என்ற அவர், முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் வரலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே நாம் தயாராகி விட வேண்டும். இன்று தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் தயாராகி வருவது தெரிகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டு செய்த திட்டங்கள் பற்றிய பட்டியலை அமித்ஷா வெளியிடுவாரா? எதிரிகள் நமக்கு சூழ்ச்சி செய்வார்கள். களத்திற்கு சென்று கழகப் பணியாற்றுங்கள். நாளை நமதே நாப்பதும் நமதே’ என்று தெரிவித்தார்.













