21 வேலை வாய்ப்புகள்.. 225 ஊழல்கள் – பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி கடும் தாக்கு
Share
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது- மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. ‘வியாபம்’ மற்றும், ‘ரேஷன் விநியோகம்’ ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225, ‘மோசடிகள்’ நடந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரி பார்த்ததற்கு பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன். நாங்கள் (காங்கிரஸ்) பல இரட்டை-எஞ்சின் மற்றும் மூன்று-எஞ்சின் அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் (பா.ஜ.க.விற்கு) தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.













