அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் மற்றும் சகோதரரின் அலுவலகங்களுக்கு முத்திரை
Share
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான அலுவலகத்தில் முத்திரை வைக்கப்பட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் இந்த அலுவலகத்துக்குள்ளே பிரவேசிக்க கூடாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரரின் அலுவலகத்திற்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுலுக்கு சொந்தமான இரண்டு வீடுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முத்திரை வைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி கோகுலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கோகுலின் இரண்டு வீடுகளை வருமானவரித்துறையினர் முத்திரை வைத்துள்ளனர். இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் முத்திரை வைத்தனர். சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் இந்த அலுவலகத்துக்குள்ளே பிரவேசிக்க கூடாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.













