பற்பசை ஆலைகளில் பயன்படுத்தப்படும் கிளி மீன்கள்; குளச்சல் மீனவர்களின் வலைகளில் சிக்கின
Share
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆள் கடலுக்கு சென்றன. ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர கிளிமீன்கள் போன்ற மீன்களும் கிடைக்கும்.
இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணெய் ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வர். கடந்த 1ம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகுகளில் 3 படகுகள் கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளிமீன்கள் ஓரளவு கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக் கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர்.
அதன்படி 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ. 2 ஆயிரம் விலை போனது. இது முந்தைய காலம் ரூ. 4,500 முதல் ரூ. 5,000 வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாள் தடையை முன்னிட்டு மீன் ஆலைகள் இயங்கவில்லை. தடை நீங்கி உள்ளதை அடுத்து இந்த ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிய பின் தான் இந்த வகை மீன்களுக்கு போதிய விலை கிடைக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.










