அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கொச்சியில் கைது
Share
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது.
அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரின் சகோதரர் கொச்சியில் இன்று (ஆக 13) கைது செய்யப்பட்டார். பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் அசோக்குமாரை கைது செய்ததாக அமலாக்கத் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், அடுத்த வாரம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்று அவர் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகள் மீதான விசாரணையை வரும் செப். 30-ம் தேதிக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம், மாநில போலீஸாருக்கு அறி வுறுத்தியது குறிப்பிடத்தக்கது.













