இமாச்சலில் மேக வெடிப்பு: கோவில் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் பலி
Share
தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்கள், குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சலில் மட்டும் இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஞாயிறு இரவு இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவி ல் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது கோவி லில் 50 பேர் இருந்ததாகத் தெரிகிறது.
நிகழ்விடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் சுக்வீந்தர் சிங், “கோயில் இடிபாடுகளுக்குள் இன்னும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகமிக அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிலச்சரிவு அபாயப் பகுதிகள், ஆறுகள் உள்ள பக்கம் மக்கள் செல்ல வேண்டாம். மழை நின்றவுடன் சீரமைப்புப் பணிகள் தொடரும். நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றாலும் கூட மக்களின் பாதுகாப்பே பிரதானம்” எனத் தெரிவித்தார்.
இமாச்சலில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 621 சாலைகள் மூடப்பட்டுள்ளன.













