கொடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Share
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். கனகராஜை கைது செய்வதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வந்த அவர் கடந்த வாரம் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அவசர ஊர்த்தியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இதய அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.













