ராமேசுவரத்தில் கோவில் பணியாளர் தற்கொலை
Share
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்-மனோ ரஞ்சிதம் தம்பதியின் மகன் நவீன்சத்ரு (வயது 36). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருக்கோவில் பணிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட 66 பணியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பணியாளராக சேர்ந்தார். இவர் கடந்த பல மாதங்களாக கோவிலில் பணியாற்றி வந்தார். இவர் ராமேசுவரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே உயர் அதிகாரிகள் கோவிலின் விதிமுறைக்கு மாறாக கூடுதல் நேரம் பணி வாங்கியதாகவும், அதற்காக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார். தொடர்ந்து தனக்கு பணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் அவரது குடும்பத்தினர் தைரியம் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் நவீன்சத்ரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவில் ஆய்வாளர் பிரபாகரன் பணியாளர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும் அவருடைய டார்ச்சரால் ஒரு பணியாளர் இறந்துவிட்டார் என்றும் கூறினர். மேலும் அவரை கைது செய்ய கோரி புதியதாக பணிக்கு சேர்ந்த பணியாளர்கள் ராமநாத சுவாமி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.













