LOADING

Type to search

இந்திய அரசியல்

“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…” பெண் அர்ச்சகர்கள் தேர்வானது பற்றி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Share

தமிழ்நாட்டில் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து தேர்வாகியுள்ளனர்.

இதுபற்றி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வருமாறு:-

“பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோவில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோவில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கனிமொழி

திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கூறியிருப்பதாவது:-

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு தேர்ச்சிபெற்றிருக்கும் திருமிகு. ரம்யா, திருமிகு. கிருஷ்ணவேணி, திருமிகு. ரஞ்சிதா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பெண்கள் நுழைய உரிமை மறுக்கப்பட்ட இடத்திலிருந்து இனி ஒலிக்கப் போகும் அம்மூன்று பெண்களின் குரல்களும் சமூகநீதி வரலாற்றின் புதிய அத்தியாயமாயிருக்கும்.

இதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

முன்னதாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள். முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.