பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை – மு.க.ஸ்டாலின் உத்தரவு
Share
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சிறப்பாகத் திட்டமிட்டு, இந்த ஆண்டும் நாம் எதிர்வரும் பருவமழைக் காலத்தை அதேபோன்ற முறையை கையாளவேண்டும். கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் விளைவாக 4399 ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 3770 ஆக குறைந்துள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வடகிழக்குப் பருவ மழையின் போது, பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பேரிடர்களின் போது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.













