சென்னையில் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு
Share
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். பெருங்குடி, ராம்நகர், ராமாபுரம், மணப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகிறார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட இருக்கிறார்.
இதனிடையே, சென்னையில் பல்வேறு சேவைத் துறைகளின் சார்பில் சாலைகளை தோண்டும் பணிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இன்று முதல் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், அவசரத் தேவைகளுக்காக மட்டும் சாலைகளை தோண்டி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மாநகராட்சி ஆணையரின் ஒப்புதல் பெற்ற பிறகு இணை ஆணையர் மற்றும் வட்டார துணை ஆணையர்கள் மூலமாக அனுமதி அளிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.













