ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? – ராமதாஸ் ஆவேசம்!
Share
ஆளவந்தார் நிலத்தை வைத்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும்பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை இறைபணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதற்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் என்பது இறைபணியோ, கல்விப் பணியோ சார்ந்தது அல்ல. அதற்காக ஆளவந்தார் நிலங்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.
சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலம் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம், 564 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்திட்டம், இன்னும் பல ஏக்கர் பரப்பளவில் தனியார் வீட்டு வசதித் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. அதைக் கண்டித்தும், அத்திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் நாளும், 16-ஆம் நாளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன் என தெரிவித்தார்.













