“இந்திய மொழிகளில் முதலில் எழுத்து உருப்பெற்றது தமிழ்தான்”
Share
‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சியில் பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேச்சு
தமிழக அரசு சார்பில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நெல்லை பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பேசியதாவது:
சோழர் காலத்தில் சில இன வேற்றுமைகள் ஆழமாக வேருன்றத் தொடங்கின. அது இன்று வரை தொடர்கிறது. சாதி வேற்றுமை யாரையாவது வாழவைத்துள்ளதா என்றால் கிடையாது.
ஆனால் சாதியால் வேறுபட்டாலும் தமிழன் என்ற ஒற்றுமை உள்ளது. நமது குணம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த நோக்கு. பிறரையும் வாழவைப்பேன் என்பதே. என் மொழி மீது பற்றிருக்கும் அதேநேரத்தில் பிற மொழிகள் பற்றி தவறாக எண்ணமாட்டேன். யாரும் எதையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். யாருக்கும் நாங்கள் எதிரிகள் கிடையாது.
அமெரிக்காவில் ஆயிரம் வருடத்திற்கு பின் அனைவரும் சமம் என பேச ஒருவர் வந்தார் என்றால் இங்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என வள்ளுவர் கூறினார். இப்படிப்பட அடிமை இல்லாத சமுதாயம் இருந்துள்ளது. நமது வரலாற்றைத் தெரிந்து கொள்ள மூன்று விஷயங்கள் உள்ளன.ஒன்று கல்வெட்டு, இலக்கியங்கள், அகழ்வாராய்ச்சிகள், இதில் கல்வெட்டு பொய் சொல்லலாம், இலக்கியங்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் விஞ்ஞானப்பூர்வமாக , நடுநிலையுடன் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சிகள் மட்டும்தான் உண்மை சொல்லும் . ஆகையால்தான் நமது வரலாற்றை இன்று தேடவேண்டி உள்ளது.
கீழடியில் பானையில் இருந்த கிறுக்கல் எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்வது, இந்திய மொழிகளில் அனைத்திலும் எழுத்து உருப்பெற்றது தமிழ்தான் என நிருபிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் இன்னும் மேற்கொள்ளப் படும் போது இன்னும் நம்முடைய பழமை தெரியும். ஆதிச்சநல்லூர் பற்றி உங்களுக்கு ஒரு கேள்வி எழவேண்டும். அங்கு கிடைக்கப்பற்ற எலும்புக் கூடுகள் தமிழர்கள் எலும்புக் கூடுகள் மட்டும் அல்ல, ஐரோப்பியர், சீனர்கள் எலும்புக் கூடுகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பல்வேறு தரப்பட மனித எலும்புக் கூடுகள் கிடைக்கும் பகுதியாக இருந்தால் அன்றைய அப்பகுதியில் சென்னை போன்று பெருநகரம் இருந்திருக்க வேண்டும்.இந்த நகரம் எங்கு இருந்தது என்று ஏன் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஆர்வம் இல்லாததே காரணம். ஆனால் இப்போது தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டி அகழாய்வு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.













