வடக்கின் செம்மணியிலிருந்து கிழக்கின் மேய்ச்சல் தரை வரை
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
ஒடுக்குமுறை தீவிரமடையும்போது போராட்டங்களும் தீவிரமடைகின்றன. இதைப்பொன்றே தமிழ் மக்கள் மேற்கண்ட போராட்டக் களங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? போராடும் மக்களும் சிவில் அமைப்புகளும் தாம் போராடும் நாட்களை எண்ணி எழுதி வைத்திருக்கின்றன. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் பெற்றோர் படிப்படியாக முதுமை, நோய் போன்றன காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் போராடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இன்னொரு இறந்து போகும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

கடந்த வாரம் தமிழ் அரசியலின் கவனக்குவிப்பு பெருமளவுக்கு செம்மணி இடைக்கால அறிக்கை
மீதுதான் காணப்பட்டது. ஊடகத் தலைப்புச் செய்திகளும் உரையாடல்களும் அந்த அறிக்கையை நோக்கியவைகளாகத்தான் காணப்பட்டன.
இந்த வாரம் கிழக்கில் மேச்சல் தரைகளின் மீது கவனம் குவிக்கப்படுகிறது. அடாத்தாக கைப்பற்றப்பட்டிருக்கும் தமது மேச்சல் தரைகளை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள், விவசாயிகளோடு, அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், வடக்கிலிருந்து சென்ற செயற்பாட்டாளர்கள் இணைந்தார்கள். மேச்சல் தரைக்கான போராட்டம் ஆயிரமாவது நாளை எப்பொழுதோ தாண்டி விட்டது
இவைதவிர ஏற்கனவே சிறிய அளவில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் பல உண்டு. யாழ் மாவட்டத்தில், தையிட்டி விகாரகைக்கு எதிரான போராட்டம், பலாலி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் காணிகளை மீட்பதற்கான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஊடகங்களின் கவனம் அவ்வப்போது அவற்றின் மீதும் குவிக்கப்படும்.
ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை கோரும் போராட்டங்கள் ஆயிரம் நாட்களைக் கடந்து விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் போராடும் மக்கள் தமது போராடும் களங்களில் தாங்கள் எத்தனை நாட்கள் போராடுகிறார்கள் என்பதனை கார்ட்போர்ட் மட்டைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்கும் போராட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போது ஊடகங்களும் இது இத்தனையாம் நாள் போராட்டம் என்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டன. இப்பொழுது அவ்வாறு நாட்களை எண்ணிச் செய்தி போடும் நிலைமை இல்லை.அதாவது அந்த நாட்களுக்கு செய்தி முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஊடகப் பரப்பில் அது சூடான செய்தியாக இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தைப் பின்பற்றி கிழக்கில் மேய்ச்சல் தரைகளுக்காகப் போராடும் அமைப்புகளும், போராடும் நாட்களை எண்ணி ஒவ்வொரு நாளும் எழுதி வைத்தன. அங்கேயும் தொடக்கத்தில் காணப்பட்ட ஊடகக் கவனிப்பு பின்னர் படிப்படியாக குறைந்தது. அண்மை வாரங்களாக அந்தப் போராட்டக் களம் ஊடகங்களின் கவனிப்பை ஈர்த்துள்ளது. மாடுகள் கொல்லப்படுவதனால் பண்ணையாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அதாவது ஒடுக்குமுறை தீவிரமடையும்போது போராட்டங்களும் தீவிரமடைகின்றன.
மேற்கண்ட போராட்டக் களங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரிகிறது? போராடும் மக்களும் சிவில் அமைப்புகளும் தாம் போராடும் நாட்களை எண்ணி எழுதி வைத்திருக்கின்றன. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் பெற்றோர் படிப்படியாக முதுமை, நோய் போன்றன காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் போராடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்னொரு இறந்து போகும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தையிட்டியில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று போராட்டம் நடக்கின்றது. இனிவரும் நாட்களில் அங்கேயும் இது எத்தனையாவது பௌர்ணமி அன்று எழுதி வைக்க வேண்டியிருக்குமா?
அதாவது தொகுத்துப் பார்த்தால், என்ன தெரிகிறது? போராட்டங்கள் மாதக்கணக்காக, ஆண்டுக்கணக்காக தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவற்றிற்குத் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறு தீர்வு கிடைக்காத ஒரு பின்னணிக்குள், போராடிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள் படிப்படியாக இறந்து போகின்ற அல்லது சோர்ந்து போய் போராட்டத்தின் தீவிரம் குறைகின்ற ஒரு பின்னணிக்குள், புதுசு புதுசாக போராட வேண்டிய தேவைகள் மேற்கிளம்புகின்றன.
அரசாங்கம் இந்த மாதம் இரண்டு புதிய சட்ட முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. முதலாவது,பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம். இரண்டாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான சட்டமூலம். இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் எதிராக தென்னிலங்கையில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பகுதிகளிலும் அரசு சாரா அமைப்புகள் அந்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. அண்மையில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு மேற்படி சட்டமூலங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஒரு சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் மூவர் பங்குபற்றியிருக்கிறார்கள்.
நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்சொன்ன இரண்டு சட்ட முன்மொழிவுகளுக்கும் எதிராக எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் காப்பகம் போன்றன மேற்படி சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு சட்ட முன்மொழிவுகளோடு மற்றொரு சட்ட முன்மொழிவு தொடர்பாகவும் விவாதங்கள் இடம்பெறுகின்றன. சிவில் சமூகங்கள் தொடர்பான ஒரு சட்டமூலம் அதுவாகும்.
இவ்வாறாக,ஒருபுறம் தீர்வு கிடைக்காத,ஆண்டுக்கணக்காக தொடர்ச்சியாக நடந்து வருகின்ற போராட்டங்கள். இன்னொரு புறம் தெட்டந் தெட்டமாக நடந்து வரும் போராட்டங்கள். இவைதவிர, புதிதாக திறக்கப்பட்டிருக்கும் போராட்டக் களங்கள்.
மேற்கண்ட போராட்டங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் மக்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களில் பின்வரும் விடயங்கள் துலக்கமாகத் தெரிகின்றன.
முதலாவது விடயம், இந்தப் போராட்டங்கள் எப்பொழுது தீவிரமடைகின்றன என்றால் ஒடுக்குமுறை முடுக்கிவிடப்படுக்கையில்தான். அதாவது அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் தீவிரமடையும் போது போராட்டங்கள் தீவிரமடைகின்றன.
இரண்டாவது, இந்தப் போராட்டங்களில் வெற்றி பெற்றவை யாவும் அரசியல்வாதிகளும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து முன்னெடுத்தவைதான்.
மூன்றாவது, இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும் போது கட்சிகள் அவர்களோடு இணைகின்றன. மிகச்சில போராட்டங்களில்தான் கட்சிகள் தாமாக முன்வந்து தொடர்ச்சியாக அல்லது குறைந்தபட்சம் தையிட்டி விகாரைக்கு எதிராக போராடுவதுபோல மாதம் ஒரு முறையாவது போராடுகின்றன.
நாலாவது விடயம்,இந்தப் போராட்டங்களில் ஒப்பீட்டு அளவில் தொடர்ச்சியானவை என்று கூறத்தக்க போராட்டங்களில் பின்னணியில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நிதி அனுசரணை உண்டு. அந்த நிதி அனுசரணை தான் இந்தப் போராட்ட நெருப்பை அணைய விடாமல் பாதுகாக்கின்றது. அந்த நிதி அனுசரணை இல்லையென்றால் இந்தப் போராட்டங்கள் சோர்ந்துவிடும். அதேசமயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இரண்டு அணிகள் ஆக்கியது இந்த உதவிகள்தான் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
ஐந்தாவது விடயம்,இந்தப் போராட்டங்கள் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படவில்லை. இந்த எல்லா போராட்டங்களையும் முன்னெடுப்பதற்கு மக்கள் இயக்கம் போன்ற கட்டமைப்புக்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் போராடத் தொடங்குவார்கள் அதில் பின்னர் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இணைவார்கள். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இணையும்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்ப் பரப்பில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் ஒட்டுமொத்தப் படம் இது. கடந்த 17 ஆண்டுகளிலும் தமிழ்த்தேசியப் பரப்பில் காணப்படும் பெரும்பாலான போராட்டங்களின் எழுச்சி வீழ்ச்சிகளை, தொடர்ச்சியை, தீவிரத்தை,தளர்வை மேற்கண்ட ஐந்து விடயங்களுக்குள் பிரதானமாக இரண்டு விடயங்கள் தீர்மானிக்கின்றன.

முதலாவது,போராட்டத்திற்கான தேவை அல்லது அடக்குமுறை அல்லது எதிர்த் தரப்பின் அல்லது வெளிநாடுகளின் ஏதோ ஒரு நகர்வு. இரண்டாவது காரணம், போராட்டத்துக்கு கிடைக்கும் நிதி அனுசரணை. இந்த நிதி அனுசரணையும் குறிப்பிட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது.
மேற்சொன்ன இரண்டு காரணங்களிலும் முதலாவது அதாவது ஒடுக்குமுறை இது தொடர்ச்சியானது. 2009க்கு பின்னரும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது.எல்லாவற்றையும்விட முக்கியமாக ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுவது.அதாவது அரசு என்ற மையத்தில் இருந்து முன்னெடுக்கப்படுவது. இலங்கைத் தீவின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்புக்குள், அரசானது தனது உபகரணங்களான படைத்தரப்பு திணைக்களங்கள்,அதிகார சபைகள் போன்றவற்றின் ஊடாக அதைச் செய்கிறது. அரசின் கொள்கை எதுவோ அதனை அரசின் உபகரணங்கள் முன்னெடுக்கும். அரசின் கொள்கை ஒடுக்குமுறையாக இருந்தால்,நில ஆக்கிரமிப்பாக இருந்தால்,சிங்கள பௌத்த மயமாக்கலாக இருந்தால் அதனை அதன் உபகரணங்கள் முன்னெடுக்கும்.
பகலில் சூரிய வெளிச்சத்தில் பிக்குகள் சட்டம் ஒழுங்கை மதியாமல் அல்லது நீதிமன்றத்தை மதியாமல் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்.அல்லது பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துவார்கள். இது ஒரு பகுதி.இன்னொரு பகுதி,திணைக்களங்கள் தங்களுக்குரிய சட்டங்களை முன்னிறுத்தி நிலப்பறிப்பை, சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும்.அது சட்டப்படி செல்லுபடியானதாகவும் இருக்கும்.
இவைதவிர அரசின் ஆயுதம் ஏந்திய உபகரணமாகிய படைத்தரப்பு தன்னிடம் உள்ள தேவையான வளங்களைப் பிரயோகித்து ஒடுக்குமுறையை அல்லது நிலப்பறிபப்பை முன்னெடுக்கும். உதாரணமாக இரவில் அல்லது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் ஒரு பௌத்த கட்டுமானத்தை படையினரின் பொறியியல் பிரிவு வேகமாகக் கட்டி முடித்துவிடும். இரவிரவாக அது நடக்கும். பகலில் தமிழ் மக்கள் விழித்தெழுந்து நிமிர்ந்து பார்க்கும்போது அந்தக் கட்டுமானம் முள்ளுக்கம்பி வேலிகளுக்கு மேலாக நிமிர்ந்து நிற்கும். எனவே இங்கே அரசின் உபகரணங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படுகின்றவை. ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்பட முடியாதபடி தொடர்புடையவை.தொடர்ச்சியானவை.
இதைத்தான் மு.திருநாவுக்கரசு அண்மையில் வெளியிட்ட ‘இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும் – சுதந்திரம் வரையான காலகட்டம்’ என்ற நூல் எடுத்துக்கூறுகிறது. இந்த நூல் கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையின் ஏற்பாட்டில் வெளியிடப்பட இருந்தது.எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அந்த நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது. இந்த நூலானது இனஅழிப்பு ஒரு கட்டமைப்புசார் நடவடிக்கை என்பதனை தொகுத்துக் கூறுகிறது. இலங்கைத் தீவின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்புக்குள் இன அழிப்பானது இவ்வாறு தொடர்ச்சியாகவும் நிறுவனமயப்பட்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதனை அது விளக்குகிறது.
ஆனால் அந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் தற்காப்பு நடவடிக்கைகளும் சரி போராட்ட நடவடிக்கைகளும் சரி தொடர்ச்சியானவை அல்ல. ஒரு மையத்திலிருந்து ஒன்றிணைக்கப்பட்டவையும் அல்ல. போராடத் தேவையான மையமான கட்டமைப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இதுதான் பிரச்சினை. கடந்த 17 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள், தளர்வு, சோர்வு போன்றவற்றிற்கு இதுதான் காரணம்.தமிழ்ச் சக்தியானது ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படாமல் சிதறடிக்கப்படுகிறது.
இதுதொடர்பான கட்டமைப்புசார் நிலைமைகளை வெளிக்கொண்டு வந்த ஒரு நூலின் வெளியீட்டை நிறுத்தியதுகூட அவ்வாறான கட்டமைப்புசார் நடவடிக்கைதான். அரசின் ஒவ்வொரு கட்டமைப்பும் அதன் அதன் வேலையை செய்கின்றன. அண்மைக் காலங்களில் தமிழ் எழுத்தாளர்களுடைய நூல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரு தொகுதி பாடல்களுக்கும் தடை உண்டு. நூல் வெளியீட்டு விழா மறைமுகமாக தடுக்கப்படுகின்றது. எல்லாமே ஒரு கட்டமைப்பின் தீர்மானங்கள்தான்.உதிரியான நடவடிக்கைகள் அல்ல.
எனவே இந்தக் கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான தமிழ் தற்காப்பு நடவடிக்கைகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கட்டமைப்பு சார்ந்தவைகளாக இருக்க வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
எனவே ஒன்று தெளிவாகத் தெரிகிறது.ஒடுக்குமுறைதான் போராட்டத்தின் தீவிரத்தையும் போராட்டத்தின் தொடர்ச்சியையும் தீர்மானிக்கிறது. அதைத்தான் மு.திருநாவுக்கரசு,பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் “எதிரி தான் தமிழ்த் தேசியத்தின் பலம்” என்று சொன்னார்களா?













