செம்மண் குவாரி முறைகேடு – ஜெயக்குமார் ஆஜர்
Share
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2017-ல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார். அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இன்று ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார்.













