“ஈழத்தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க இந்தியா இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்கின்றது”
Share
இந்திய நிதியமைச்சர் நிர்மலா தெரிவித்தாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் . இ. சிறிநாத் ஊடக சந்திப்பில் தெரிவிப்பு
(கனகராஜா சரவணன்)
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் 2ம் திகதி திங்கட்கிழமை (2-11-2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்து அங்குள்ள பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். தமிழின சுத்திகரிப்பு அதே போன்று காஷ்மீரில் நடைபெற்ற இனசுத்திகரிப்பு தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒப்பீடு தொடர்பான ஆய்வு மாநாட்டில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
என்னுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஜக்கிய அமெரிக்க தமிழ் செயற்குழு அமைப்பின் செயலாளர் லவன்; கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் வன்னிஅரசு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுக்குரிய இளைஞர் அணி தலைவர் சூர்யா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கு பொறுப்பான செயலாளர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சந்தித்தோம்
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகளில் காணப்படும் இழுத்தடிப்புகள், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர்களிடம் எடுத்துரைத்தோம்.
அதுபோல் சமகாலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்றது என்ற போர்வையிலே அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுகின்ற சட்டம் என்ற போர்வையில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பிலும் நாம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.
அதேவேளை தொல்பொருள் என்ற போர்வையிலேயே ஆலயங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் குறிப்பாக திருகோணமலையில் சிவன் ஆலயத்திலே தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பணிகள் இதனால் பாதிக்கப்படும் ஆன்மீகத் தன்மை, தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட நுணுக்கத்தின் ஊடாக பல செயற்றிடங்கள் முன்னெடுக்கப்பட்டுவதோடு பௌத்த விகாரைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
இலங்கையிலே புதிய அரசு அமையப்பெற்றுள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இரண்டு ஆண்டுகளாக எந்த விதமான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. இந்தியாவால் அறிமுகப்படுத் தப்பட்டிருந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல்கூட நிச்சயமற்ற தன்மை இருக்கின்றது. என தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் விடையங்களை மிகவும் விரிவாக எடுத்துரைத்துதோடு இதனை உன்னிப்பாக இந்திய நிதியமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இவ்விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தமது கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும் ஆலயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதாகவும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இது தொடர்பில் எடுத்துரைப்பதாகவும் இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்.;
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவினுடைய ஈடுபாட்டை நாம் கோரியிருந்தோம். அதுபோல் இந்தியாவின் உதவியுடன் வடகிழக்கிலேயே அபிவிருத்தி திட்டங்கள் கட்டுமானங்களை மீண்டும் செய்ய வேண்டும் என்பதையும் நாம் எடுத்துரைத்ததோடு, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இன்னும் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதையும் நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
இராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசு பல விடயங்களை நாடு ரீதியாக முன்னெடுத்திருந்தாலும்கூட வடகிழக்குலே மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மாகாண சபை தேர்தல் அரசியல் தீர்வு போன்ற பல விடயங்கள் செய்யப்படாமல் இருப்பது போன்ற விடயங்கள் உதவியை எதிர்பார்ப்பினை வெளிக்காட்டி இருந்தோம்.
இந்நிலையில் இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் தொடர்பில் நாம் எடுத்துரைத்திருந்தோம். அவர்கள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விரும்பினால் அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு இலங்கை வரவிரும்பாமல் உள்ள அகதிகளை இந்திய நிரந்தர குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்
அத்துடன், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.













