தென் கொங்கு பகுதியை ஆண்ட மூவேந்தர்கள் கல்வெட்டு ஆய்வில் தகவல்
Share
தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர். மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழி பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல் குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளமாக உள்ளது. மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது.
அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும் கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்த கோவில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அது போல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.













