தமிழ்நாடு பாஜக ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
Share
அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி முறிவடைந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பாஜக உயர் மட்ட குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்,எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், இப்போதும், எப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் அதிமுக அறிவித்திருந்தது.
இந்நிலையில், டில்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அண்ணாமலை டில்லி சென்றுள்ள நிலையில், சென்னையில் இன்று பாஜக உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் தென்மாநில பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தை கொண்ட இவர், அமித்ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். எனவே, இக்கூட்டத்தில், அதிமுகவுடனான பிளவு குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கமலாயத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பாஜக உயர்மட்ட உயர் மட்ட குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.













