LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பாதுகாப்பை நீக்குவது ஆபத்தானது!

Share

– சர்வஜன அதிகாரம் கட்சி எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகள் மடங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை நீக்குவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பிரியங்கார மகாமுல்லகே எச்சரித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது:-

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாகக் காட்டுப் பகுதிகளிலுள்ள பிக்குகள் மடங்களில் தங்கியிருந்து பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகப் பிக்குகள் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறான நிலையில், அப்பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், பிக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் நீக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல்களால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். காத்தான்குடி, கோனகல உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களும், வடக்கு, கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்களும் எதிர்கொண்ட துயரங்களை மறந்துவிட முடியாது. சுமார் 30 ஆண்டுகால போருக்குப் பின்னரே நாட்டில் அமைதி திரும்பியது.

போர் முடிவடைந்த பின்னர் பிக்குகள் மீண்டும் வடக்கு, கிழக்குக்குச் சென்று தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் காட்டுப் பகுதிகளுக்கும் அருகில் பிக்குகள் மடங்களை அமைத்து மதப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். உதாரணமாக, திருகோணமலை மாவட்டத்தின் அரிசிமலைப் பகுதியில் 38 பிக்குகள் மடங்கள் உருவாக்கப்பட்டு 210 பிக்குகள் உபசம்பதா பெற்றுள்ளனர். இவ்வாறான கடினமான சூழ்நிலைகளில் மதப் பணிகளில் ஈடுபடும் பிக்குகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

பிக்குகளுக்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர்,

“பனாமுரே திலகவன்ச தேரர், பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எழுதிய கடிதத்தில், தனது உயிரைப் பாதுகாப்பதற்காக மீண்டும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு கோரியுள்ளார். கடந்த மாதம் வாள்களுடன் வந்த சிலர் தன்னைத் தேடியதாகவும், முறைப்பாட்டையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்குகள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டால், அப்பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது ஏற்பட்ட பதற்றங்களையும் அதன் மோசமான விளைவுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. மீண்டும் அவ்வாறான இன முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த விகாரைகள், பிக்குகள் மடங்கள் மற்றும் அங்குள்ள பிக்குகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவது அரசின் தலையாய பொறுப்பாகும்.” – என்றார்.