LOADING

Type to search

இந்திய அரசியல்

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.