செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட ”உண்மை – நீதி”
Share
”தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் , காணாமல்போதல்கள்,மனித உரிமைமீறல்கள் தொடர்பாக இந்த நாட்டில் நடக்கும் எந்தவிதமான உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளும் தமிழ் மக்களுக்கு நீதியை ஒருபோதுமே பெற்றுத்தராது என்பதற்கு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான ஆய்வாளரான தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவவும் ஏனைய உறுப்பினதற்போது சாட்சியாக மாறியுள்ளனர்”
எனினும் கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பலர் தப்பிவிட இராணுவச் சிப்பாயான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ என்பவருக்கு 1998 ஜூலை மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது, நீதிமன்றக் கூண்டில் நின்று ராஜபக்ஷ ஒரு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை அளித்தார் “நான் யாரையும் கொல்லவில்லை, உடல்களைப் புதைக்க மட்டுமே உதவினேன். செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட 300 முதல் 400 தமிழர்களின் உடல்கள் இருக்கும் இடங்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்று பகிரங்கமாகக் கூறினார். இந்த சாட்சியம் ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக உள்ளது
———கே.பாலா
செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவை வெறும் மனித உடல்கள் அல்ல. அவை சாட்சிகள். நீதி கேட்டுத் தவிக்கும் தலைமுறைகளின் ஏக்கங்களைச் சுமந்திருக்கும் மனித எச்சங்கள். ஆனால், யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பூமியில் மீட்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் “இயற்கை அனர்த்தங்களாலோ அல்லது தொற்று நோய்களாலோ” உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவவின் அறிக்கை, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நெஞ்சில் மீண்டும் ஒருமுறை நெருப்பை அள்ளிப்போட்டுள்ளது
அறிவியல் பூர்வமான உண்மைகளைத் தேடித் தர வேண்டிய நிபுணர்கள், ஆய்வாளர்கள் , அதிகாரத்தின் நிழலில் நின்று சாட்சியங்களை மழுங்கடிக்கும் முயற்சிகள் எத்தகைய அநீதியானது? வரலாற்றின் பக்கங்களில் குருதி படிந்த உண்மைகளைத் திரித்து, இராணுவத்தை பாதுகாப்பதற்காக தனது மனச்சாட்சியையே அடகுவைக்கும் இந்த ஆபத்தான வேலையை தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ செய்திருப்பது சிங்களவர்கள் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த மிச்சசொச்ச நம்பிக்கையையும் தகர்த்தெறிந்துள்ளது. இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு போதும் நீதி கிடைக்காது என்பதையே இது மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.
செம்மணி மனிதப்புதைகுழியின்
சுருக்கமான வரலாற்று பின்னணி
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கைஇராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக ‘ரிவிரச ‘ என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது . இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தென்மராட்சி மற்றும் வன்னிப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்தனர். 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மீண்டும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு, அப்பகுதியில் கடுமையான ஊரடங்குச் சட்டமும், சோதனைச் சாவடிகளின் மூலம் கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
1996-1997 காலப்பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் சோதனைச் சாவடிகளிலும் இராணுவ முகாம்களிலும் வைத்து கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.செம்மணியில் மனிதப் புதைகுழிகள் உள்ளன என்ற உண்மை, ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தின் விசாரணையின் போதே முதன்முதலில் உலகிற்குத் தெரியவந்தது. 7 செப்டம்பர் 1996 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கிருசாந்தி குமாரசுவாமி என்ற மாணவி, செம்மணி பகுதியில் அமைந்திருந்த இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.மகளைத் தேடிச் சென்ற அவரது தாய் ராசம்மா, தம்பி பிரணவன் மற்றும் குடும்ப நண்பர் கிருபாகரமூர்த்தி ஆகிய மூவரும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 4உடல்களும் செம்மணி உப்புவெளிப் பகுதியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பலர் தப்பிவிட இராணுவச் சிப்பாயான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ என்பவருக்கு 1998 ஜூலை மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது, நீதிமன்றக் கூண்டில் நின்று ராஜபக்ஷ ஒரு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை அளித்தார் “நான் யாரையும் கொல்லவில்லை, உடல்களைப் புதைக்க மட்டுமே உதவினேன். செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட 300 முதல் 400 தமிழர்களின் உடல்கள் இருக்கும் இடங்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்று பகிரங்கமாகக் கூறினார்.
இதுவரை காலம் சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் கூறிவந்த வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு, ஒரு இராணுவச் சிப்பாயின் கூற்றே சாட்சியமாக அமைந்தது. சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டில் சர்வதேச நிபுணர்களின் முன்னிலையில் செம்மணியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அங்கு அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் இருந்து 15 மனித எச்சங்கள், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.அவற்றில் சில உடல்கள் 1996 இல் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களுடையது என்பது தடயவியல் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.இருப்பினும், முழுமையான மற்றும் வெளிப்படையான அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல், அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களால் அந்த விசாரணை முடங்கியது.
உண்மையை புதைத்த
சோமதேவவின் அறிக்கை
நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினராலும் முன்னெடுக்கப்பட்டன. 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது 583 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளும், சிறார்களின் உடைகள், பொம்மைகள், பாடசாலைப் பைகள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையிலான மனித எச்சங்களும் மீட்கப்படடன .
செம்மணி மனித எச்சங்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில், தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தரப்பிலிருந்து பல்வேறு கட்டங்களாக இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறான நிலையில்தான் ராஜ் சோமதேவ இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட 583 எலும்புக்கூடுகளில் சுமார் 150 வரையிலான எலும்புக்கூடுகளையும் அவற்றுடன் சேர்த்து கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை ஒன்றைத் தயாரித்து அண்மையில் அவர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இடைக்கால அறிக்கைகளாக சமர்ப்பித்தார்
இந்த அறிக்கைகளில்தான் ”செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணியில், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. அத்துடன் இந்தப் புதைகுழியானது சமய ரீதியிலான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களையும் கொண்டுள்ளது.இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், செம்மணிப் புதைகுழியானது உலகின் பல பகுதிகளில் அவதானிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காண்பிக்கின்றது. குறிப்பாக சரியான முறையில் அடக்கம் செய்யப்படும் முறைமைகளுடன் ஒப்பிடுகையில், அந்தப் புதைகுழி குறிப்பிட்டுக் கூறக்கூடிய அதிக ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றது. இறந்தவர்களின் அதிக அடர்த்தியானது சடலங்கள் எந்தச் சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை முறையாகவும், துல்லியமாகவும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரபூர்வ விடயங்கள் தென்படவில்லை.
செம்மணிப் புதைகுழியில் இருந்து அதிகளவான எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டமைக்குக் காரணம் இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன இருந்திருக்கலாம். ஆதலால் சடலங்களை முறையாகவும் விரைவாகவும் அப்புறப்படுத்த வேண்டிய தேவை அந்நேரத்தில் ஏற்பட்டிருக்கலாம். இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இதுவரை மீட்கப்பட்ட சில தடயங்கள், அங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருட அறிக்கையில் இருந்து இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விடயங்கள் இந்த அறிக்கையில் முற்றிலும் மாறுபடுவதே தமிழ் மக்கள் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக தொடர்ந்து இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் சந்தேகத்தையும் விசனத்தையும் ராஜ் சோமதேவ மீதான விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதிய நீதிமன்றில் ஒரு இடைக்கால ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையில் மிகவும் தெளிவாக, யாழ் செம்மணியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிப் பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாகவும், வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வதுபோன்று அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்
யார் இந்த ராஜ் சோமதேவ?
இவரின் முழுப்பெயர் டெல்கஹவத்தகே ராஜ் குமார சோமதேவ.நவம்பர் 01, 1960 இல் வெல்லவாயாவில் பிறந்தவர். களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் தொடர்பான முதுகலை கல்வி நிறுவனத்தின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றியவர்.லண்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் நிறுவனத்தின் ‘சார்லஸ் வாலஸ் ஆராய்ச்சிப் பேராளர்’ விருதைப் பெற்றவர். மேலும் இலங்கை தொல்லியல் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்.இலங்கையில் தொல்லியல் துறையுடன் தடயவியல் அறிவியலையும் இணைத்த முன்னோடிகளில் இவரும் ஒருவர். இலங்கையில் கடந்த காலங்களில் கண்டெடுக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளில் (உதாரணமாக மாத்தளை பொது மருத்துவமனை வளாகம், மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் தற்பொழுது யாழ்ப்பாணம் செம்மணி மனித எச்சங்கள் அகழ்வாராய்ச்சி) முக்கிய ஆலோசகராகவும் நிபுணராகவும் அரச மற்றும் நீதிமன்றப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்.
பேராசிரியர் சோமதேவவின் முந்தைய வரலாற்று மற்றும் தொல்பொருள் நிலப்பாடுகளைக் கவனித்தால், அவரது அணுகுமுறை எப்போதுமே பக்கச்சார்பானதாகவே இருந்து வந்துள்ளது என்கின்றார் சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரும் யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகைதரு விரிவுரையாளருமான டாக்டர் முரளி வல்லிபுரநாதன்
இலங்கையில் விஜயனின் வருகைக்கு முந்தைய பெருங்கற்காலப் பண்பாடு , பொம்பரிப்பு, கந்தரோடை, ஆனைக்கோட்டை முத்திரை (கோவேதா), மற்றும் தமிழ் பிராமிச் சான்றுகள் என தமிழர்களும் சைவ வழிபாட்டு எச்சங்களும் இந்த மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்தற்கான உறுதியான தொல்பொருள் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ராஜ் சோமதேவ இந்த வரலாற்று உண்மைகளை ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்லர்.
திஸ்ஸமஹாராமவில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டு எழுத்துக்களை (எண் 53) ஐராவதம் மகாதேவன் மற்றும் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் ஆகியோர் “திரளி முறி” என்ற தமிழ் பிராமி எழுத்தாக வாசித்த போது, அதனை மறுத்து அது சிங்கள-பிராகிருத வடிவம் என வலிந்து திரித்தவர் இந்த சோமதேவ.
இலங்கையின் தொல்வரலாறு முழுவதும் சிங்கள பௌத்தர்களின் பூர்வீகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்ற ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை தொல்பொருள் ரீதியாக நிலைநிறுத்தவே அவர் தொடர்ச்சியாக முயன்று வந்துள்ளார். இப்போது இந்துக்களின் ‘சமாதி’ என்ற புனித வழிபாட்டு முறையையும் போர் வன்முறைகளை மறைக்கத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்கின்றார் டாக்டர் முரளி வல்லிபுரநாதன்
கோத்தபாய ராஜபக்சவின்
நம்பிக்கைக்குரியவர்
தற்போது ராஜ் சோமதேவவின் அறிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர் ஒரு கோத்தபாய ராஜபக்ச விசுவாசியாக,கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவராக உள்ளமையும் வெளிப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட “கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை மேலாண்மை செய்வதற்கான ஜனாதிபதி பணிக்குழு”வில் ராஜ் சோமதேவவும் முக்கிய நபராக நியமிக்கப்பட்டிருந்தார் இந்தப் பணிக்குழு 2020 ஜூன் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட அந்தப் பணிக்குழுவில் பேராசியர் ராஜ் சோமதேவ உட்பட கடும் இனவாதிகளான எல்லாவல மேதானந்த தேரோ (தொல்லியல் சக்கரவர்த்தி என குறிப்பிடப்பட்டவர்) பானமுரே திலகவன்ச தேரோ (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிரதம சங்கநாயகர்)மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன (பாதுகாப்பு அமைச்சின் அன்றைய செயலாளர்) செனரத் பண்டார திஸாநாயக்க (தொல்பொருள் திணைக்கள அன்றைய பணிப்பாளர் நாயகம்)சந்திரா ஹேரத் (அன்றைய காணி ஆணையாளர் நாயகம்)ஏ.எல்.எஸ்.சி. பெரேரா (அன்றையஅளவையாளர் நாயகம்) பேராசிரியர் கபில குணவர்தன,தேஷபந்து தென்னகோன் (மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இருந்தவர் )எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க (அன்றைய கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர்)திலீத் ஜயவீர (தெரண ஊடகநிறுவனத்தின் தலைவரும் தற்போதைய சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் எம்.பியுமாக இருக்கும் இவர் ஒரு இனவாதியாகவே பார்க்கப்படுபவர் ) நியமிக்கப்பட்டனர்
தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட இந்தக்குழுவில், ஆரம்பத்தில் தமிழ் அல்லது முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த தொல்பொருள் வல்லுநர்களோ பிரதிநிதிகளோ எவரும் சேர்க்கப்படவில்லை. கடும் இனவாதிகளான பௌத்த துறவிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இக்குழு, கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் பூர்வீக நிலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை தொல்பொருள் இடங்கள் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கவும், பௌத்த மயமாக்கவும் பயன்படுத்தப்படும் என்ற கடுமையான விமர்சனங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் அப்போது முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைகக்குரியவரான ராஜ் சோமதேவதான் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பேராசிரியர் ராஜ் சோமதேவவினை நீதிமன்றமே அதிகார பூர்வமாக நியமித்திருந்ததுஇவ்வாறான நிலையில் அவரின் அறிக்கை செம்மணி மனிதப்புதைகுழியின் உண்மைகளை, சாட்சியங்களை அப்படியே செம்மணி மனிதப்புதைகுழிக்குள் புதைப்பதாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
அறிக்கையை நிராகரிக்க
வேண்டிய 5 காரணங்கள்
செம்மணியில் புதைக்கப்பட்ட உடல்கள் போர்க்காலப் படுகொலைகள் அல்ல என்றும், அவை ஏதோ ஒரு தொற்றுநோய், இயற்கை அனர்த்தம் அல்லது வழக்கமான மனித சடங்கு ரீதியான புதைப்புகள் என்றும் நிறுவுவதற்கு முயற்சிக்கும் ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்களை பட்டியலிடுகின்றார் சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ ஆலோசகரும் யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகைதரு விரிவுரையாளருமான டாகடர் முரளி வல்லிபுரநாதன்
1.எலும்புக்கூடுகளின் காயங்களையும் நிலைகளையும் திட்டமிட்டு மறைத்தல்:’தியான நிலை’ (சமாதி) என்ற போலி விளக்கம்: 227-ஆம் இலக்க எலும்புக்கூடு வழக்கமான மனித சடங்கின்படி ‘தியான நிலையில்’ (சமாதி) புதைக்கப்பட்டதாக அறிக்கை சித்திரிக்கிறது. ஆனால், முந்தைய நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தடயவியல் பதிவுகளின்படி, அதே எலும்புக்கூட்டின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததும், மண்டையோடு மற்றும் தாடை எலும்புகள் கொடூரமான ஆயுதங்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததும் புகைப்படச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கைகள் கட்டப்பட்டு, மண்டையோடு பிளக்கப்பட்ட கொலையை ‘தியான நிலை’ என வர்ணிப்பது தடயவியல் மோசடி .முறையற்ற புதைப்புகள்: பல எலும்புக்கூடுகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஒன்றன் மேல் ஒன்றாக அவசரக் கோலத்தில் வீசப்பட்ட நிலையிலும் காணப்பட்டமையை அறிக்கை திட்டமிட்டு மூடிமறைக்கிறது.
2. சமகாலப் பொருட்களும் சான்றுகளும் புறக்கணிக்கப்படல்:
குழந்தைகளின் பொருட்கள்: 25-ஆம் இலக்க எலும்புக்கூடு ஒரு 4-5 வயதுக் குழந்தையினுடையது. அக்குழந்தையின் அருகே ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நவீன பாடசாலைப் பை, விளையாட்டுப் பாத்திரங்கள் மற்றும் பால் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.சவப்பெட்டி என்ற புனைவு: அங்கிருந்த சிறு ஆணிகளையும் உக்கிய துணித் துண்டுகளையும் வைத்து, அது ஏதோ மரபுவழிச் சவப்பெட்டிப் புதைப்பு என அறிக்கை அனுமானிக்கிறது. ஆனால், பாடசாலைப் பையுடனும் விளையாட்டுப் பொருட்களுடனும் ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பது, அது திட்டமிட்ட கடத்தல் மற்றும் படுகொலை என்பதையே திட்டவட்டமாக நிரூபிக்கிறது.
3. நோயியல் மற்றும் மூலக்கூற்று ஆதாரங்கள் இன்மைகள்:ஒரு பெரும் தொற்றுநோயால் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தார்கள் என்று வாதிடுவதற்கு, பற்களின் கூழ்மத்திலிருந்து பெறப்படும் பண்டைய டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலமாகவோ அல்லது எலும்புகளில் உள்ள நோய்க்கூற்று அடையாளங்கள் (கொலரா, பிளேக், தைபோய்ட் போன்றவை) மூலமாகவோ உயிரியல் சான்றுகள் நிறுவப்பட வேண்டும்.சோமதேவவின் அறிக்கையில் இத்தகைய எந்தவொருஆதாரா பூர்வ (விஞ்ஞானபூர்வ) ஆய்வுகளோ, ஆய்வக நோயியல் உறுதிப்படுத்தல்களோ கிடையாது. வெறும் அனுமானங்களை மட்டுமே அறிக்கையாகத் தந்துள்ளார்.
4. யாழ்ப்பாணத்தின் சுகாதார மற்றும் மரணப் பதிவேடுகளில் சான்றுகள் இல்லை:செம்மணியில் மீட்கப்பட்ட உடல்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பச்சிளங்குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடையவை. அப்படியொரு கொடிய தொற்றுநோய் பரவி நூற்றுக்கணக்கான மக்கள் ஒரேயடியாக இறந்திருந்தால், அதற்குரிய ஆவணங்கள் யாழ்ப்பாணத்தின் பொதுச் சுகாதாரத் துறை, போதனா வைத்தியசாலை அல்லது தேவாலயங்களின் மரணப் பதிவேடுகளில் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு தொற்றுநோய் அனர்த்தம் நிகழ்ந்தற்கான எந்தவொரு நிர்வாகப் பதிவும் வரலாற்றில் இல்லை.
5. இராணுவத்தினரின் நீதிமன்ற வாக்குமூலங்களை மூடிமறைத்தல்:செம்மணி புதைகுழி என்பது தொல்பொருள் ஆய்வின் போது தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஒன்று அல்ல. 1998-ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கு விசாரணையின் போது, முன்னாள் இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளிட்ட படையினரால் நீதிமன்றில் பகிரங்கமாக அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டன. பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்ற உறுதிப்படுத்தப்பட்ட வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் ஒதுக்கிவிட்டு, இதனை ‘தொற்றுநோய் மரணம்’ என்று திசைதிருப்புவது அப்பட்டமான நீதிமறுப்பு என்கின்றார்
சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள்
ராஜ் சோமதேவவின் அறிக்கையில் போர்க்காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாகப் புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகளை, “இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்ற நோய்களால் இறந்தவர்களின் உடல்கள்” என சுட்டிக்காட்ட முயல்வது உண்மையான வரலாற்று மற்றும் போர்க்காலச் சம்பவங்களை திசைதிருப்பும் முயற்சி என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், ஆடைகள் மற்றும் பொருட்கள் பல தசாப்தங்களுக்கு முன் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுடையவை என்பதற்கான சான்றுகள் இருக்கும்போது, அவற்றுக்கு முறையான காலக்கணிப்பு அல்லது தடயவியல் அறிவியல் சோதனைகளை செய்யாமல் அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளுக்கு வருவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவின் அறிக்கையில் தொற்றுநோய் காரணமாக கனிசமான நபர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப் போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லலை என்ற கருத்தை தெரிவித்துள்ளார். அதே பந்தியில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்யவுள்ள காரணத்தினால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, தொற்று நோயில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார். பேராசிரியர் ராஜ் சோமதேவ இவ்வாறு எந்த அடிப்படையில் அறிக்கையில் இந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளார்?
அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட தொற்று நோய் ,இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் அறிக்கையில் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிடவிடயத்தை அழுத்தி கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?இதற்கு முன்னர் 3அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது சொந்த முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணங்கள் நிகழந்த பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையில் மனிதப்புதைகுழி என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தாதது ஏன்?
செம்மணி பகுதி மனிதப் புதைகுழி மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ அத்துமீறல்களோடு தொடர்புடையது என்பது ஏற்கனவே நீதிமன்ற வழக்குகள் மூலம் உலகறிந்த நிலையில், அதனை தொற்று நோய் மரணங்கள் அல்லது இயற்கை அனர்த்த மரணங்கள் என திசைதிருப்ப முயல்வது அறிவியல் பூர்வமான தடயவியல் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது ராஜ் சோமதேவ இலங்கை அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரையும் காப்பாற்றும் நோக்கில் “அரசின் கைக்கூலியாக” செயல்படுகிறார் என்ற குற்றச்ச்சாட்டுகள் பகிரங்கமாகக முன்வைக்கப்ட்டுள்ளன. செம்மணியில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கான ஆதாரங்களை மறைத்து, வரலாற்று உண்மைகளைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கைகளை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார் என்று தமிழ் அரசியல் தரப்புகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
சோமதேவவின் அறிக்கைக்கு
பதிலாகும் சோமரத்னவின் வாக்கு மூலம்
ராஜ் சோமதேவ செம்மணி மனிதப்புதைகுழியில் இருப்பது தொற்று நோய்கள், இயற்கை அனர்த்தங்களினால் இறந்தவர்களின் மனித எச்சங்கள் என அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் மாணவி கிருஷாந்தி படுகொலை குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அப்போது நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் இப்போது ராஜ் சோம தேவவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக் கை எந்தளவுக்கு திரிவுபடுத்தப்பட்டது, எந்தளவுக்கு உண்மைகளை மூடி மறைக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது அந்த வாக்கு மூலத்திலிருந்து சில பகுதிளைப்பார்ப்போம்
“நான் அரியாலை முகாமில் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.அந்தக் காலத்தில் நான் கப்டன் லலித் ஹேவாவின் கீழ் பணியாற்றினேன். குடும்பங்களின் பெயர்களையும் இளைஞர்களின் பெயர்களையும் பதிவு செய்வதே எனது பணியாக இருந்தது. நாங்கள் இரண்டு பட்டியல்களைத் தயாரிப்போம்.ஒருமுறை, கப்டன் லலித் ஹேவாவும் லெப்டினன்ட் விஜேசிறிவர்தனவும் வேறொரு பிரிவிலிருந்து படையினரைக் கொண்டுவந்து என்னுடைய மேற்பார்வையின் கீழ் பணியாற்றச் செய்தனர்.
புலிச் சந்தேகநபர்கள் என அவர்கள் குறிப்பிட்ட நபர்களின் பட்டியல் எங்களிடம் வழங்கப்பட்டது. அந்தச் சந்தேகநபர்கள் வசித்த இடங்களைக் காட்டுமாறு என்னிடம் கேட்கப்பட்டது. அதன் பின்னர், சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மேஜர் வீரக்கொடியும் மேஜர் குணசேகரவும் சிலரை அழைத்து வந்து, புலி அமைப்பின் இரண்டு தகவலாளர்கள் முன்னிலையில் நிறுத்தினர். அந்த நபர்களில் புலிச் சந்தேகநபர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுமாறு தகவலாளர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அடையாளம் காட்டியவர்கள் ஏனையவர்களிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டனர். சுமார் 50 பேர் அடையாளம் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டனர்.
அரியாலையில் மக்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர், புதைக்கப்பட்டனர் என்பதை என்னால் காட்ட முடியும்.ஆரம்பத்தில், சிலர் கைது செய்யப்பட்டு முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜெயா கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். வேறு சிலர் ஒரு பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவ்வாறு செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் கப்டன் லலித் ஹேவா, லெப்டினன்ட் விஜேசிறிவர்தன மற்றும் லெப்டினன்ட் துடுகலா ஆகியோராவர்.
அரசாங்க ஊழியரான செல்வரத்தினம் என்பவரைக் கைது செய்ததிலும் அவர்களே ஈடுபட்டிருந்தனர். அவர் முகாமுக்குக் கொண்டுவரப்பட்டார். மறுநாள் அவரது மனைவி வந்து, அவரைப் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டார். அப்போது என்னிடம் அதற்குப் பதில் இருக்கவில்லை.அந்த முகாமில் மக்களைச் சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டடத்தை இப்போதும் என்னால் உங்களுக்குக் காட்ட முடியும். நான் முகாமுக்குச் சென்றபோது, அந்தக் கட்டடத்தில் 25 பேர் இருந்தனர். அவர்களில் செல்வரத்தினமும் இருந்தார். அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தன. தனக்குப் புலிகள் அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி, அவர் என்னிடம் கெஞ்சினார்.நான் கப்டன் ஹேவாவிடம் செல்வரத்தினத்தை விடுவிக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் சம்மதித்தார். ஆனால், அன்றிரவே செல்வரத்தினம் கொல்லப்பட்டார்.மறுநாள் நான் மீண்டும் அங்கு சென்றபோது, மேலும் 10 சடலங்களைக் கண்டேன்.
நான் ஜெயா கட்டடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, உதயகுமார் என்ற மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை விடுவிக்குமாறு என்னிடம் கெஞ்சினர். நான் சென்று கப்டன் ஜயவர்தனவிடம் அவரை விடுவிக்குமாறு கேட்டேன்.அன்று பிற்பகல் அவர் மற்றொரு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நான் அங்கு சென்றபோது, அந்த நபரை விடுவிக்குமாறு கோரும் வானொலிச் செய்தி ஒன்று வந்தது. ஆனால், அவர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தார். அவரது உடல் கத்திகளால் வெட்டப்பட்டிருந்தது. அவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் கொல்லப்பட்டார்.சித்திரவதைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவை என்பதை நான் நன்கு அறிவேன். அந்தக் கட்டடத்தில் அவற்றை என்னால் உங்களுக்குக் காட்ட முடியும்.
ஒரு நாள், கப்டன் லலித் ஹேவா என்னிடம் ஒரு மண்வெட்டியைக் கொண்டுவருமாறு கேட்டார். நான் அங்கு சென்றபோது, ஆடைகள் எதுவுமின்றி இருந்த ஒரு பெண்ணுடன் கப்டன் ஹேவா இருந்தார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் முன்னதாகவே முகாமுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். லலித் ஹேவா அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். பின்னர், நான் கொண்டுவந்த மண்வெட்டியாலும் சில கம்பிகளாலும் அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் தாக்கினார். அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.அவர்களின் உடல்களை அங்கேயே புதைக்க அவர் முயன்றார். ஆனால், அது முடியவில்லை. பின்னர், அந்தச் சடலங்கள் செம்மணிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை என்னால் காட்ட முடியும்.
அரியாலையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை என்னால் கூற முடியும். எத்தனை பேர் புதைக்கப்பட்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.கிருஷாந்தி குமாரசுவாமியைக் கொலை செய்ததாக நான் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கொலையை நான் செய்யவில்லை. அவரது உடலை நான் புதைத்தேன். ஆனால், அப்போது அது கிருஷாந்தி குமாரசுவாமியின் உடல் என்பது எனக்குத் தெரியாது.
தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட எனது நான்கு சக ஊழியர்களும் நானும் வாக்குமூலங்களை அளித்துள்ளோம்.செம்மணியில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள 10 இடங்களை என்னால் காட்ட முடியும். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பெரேராவால் 5 இடங்களைக் காட்ட முடியும். டி. எம். ஜயதிலக்க என்பவரால் ஒரு கோவிலுக்கு அருகில் பலர் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்ட முடியும்.ஜெயா கட்டிடத்தின் பின்புறத்திலும் ஓர் இடம் உள்ளது. ரவி என்பவருக்குச் சொந்தமான ஒரு வாகனப் பழுதுபார்க்கும் பட்டறையில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் பிரதான முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டதை நான் அறிவேன். அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன என்பதும் எனக்குத் தெரியும்.”
செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள், முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் புதைத்த விபரங்கள் யாவற்றையும் சர்வதேச விசாரணையின் ஊடாகவே தாம் முழுமையாக வெளிப்படுத்தத் தயார் என சிறையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச நிபந்தனை விதித்துள்ளார்.இவ்வாறான உண்மைகளைத் வெளிப்படுத்தத் தன் கணவர் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் கடந்த அரசுகளைப்போன்றே அநுரகுமார அரசும் சர்வதேச விசாரண பொறிமுறைகளை நிராகரித்து உண்மைகளை மூடி மறைத்து இராணுவத்தினரை பாதுகாக்கவே முற்படுகின்றது என்பதற்கும் இந்த செம்மணி மனிதப்புதைகுழியே சாட்சியாகவுள்ளதுடன் இந்த நாட்டில் நடக்கும் எந்தவிதமான உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது என்பதற்கு ராஜ் சோமதேவவும் சாட்சியாகவுள்ளார்.










