பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் இலக்கியப்பணி
Share
திருமதி. உமா மோகன்–முதுகலைமாணி (தமிழ்)
மொன்றியால் – கனடா
ஈழத்தில் பிறந்து தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுள் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களும் முக்கியமான ஒருவராவார். இவர் மொழியியல் ஆய்வுத்துறையில் உலகறிந்த மொழியியல் அறிஞராக விளங்கியதோடு பழந்தமிழ் இலக்கிய ஆளுமை மிக்கவராகவும் இருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் தொண்டாற்றியுள்ளார்.
மொழியியல் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கிய பேராசிரியர் அவர்கள் மதுரை தமிழ்ச் சங்கப் பண்டிதராகவும் மொழித்தூய்மையும் மரபும் பேணிய செந்தமிழ்க் காவலராகவும் விளங்கியுள்ளார்.
இதைவிடவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் ஆய்வு நிலை மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் என பன்முகத் திறமை கொண்டவராகவும் திகழ்ந்தவர். அவர் இப்படி பன்முகத் திறமை வாய்ந்தவராக விளங்குவதற்கு அவருக்கிருந்த கல்விப் பின்புலமும் பன்மொழி அறிவும் காரணமாக இருந்துள்ளன.
பேராசிரியரின் கல்விப்பின்புலமும் பன்மொழி அறிவும்
யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சதாசிவம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை அராலியிலும் இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களிலேயே ஆங்கிலம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். தனது கல்லூரிக் காலங்களில் சிங்களம், பாளி ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார்.
1948 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு மொழியியல்த் துறையில் தனது முழு ஈடுபாட்டையும் காட்டி தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கேயே முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். அதன் பின் அங்கு முதுநிலை மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். மொழியியல்த் துறையில் தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஜேர்மன் போன்ற மொழிகளையும் கற்றுக் கொண்டார். பேராதனை பல்கலைக்கழகத்திலேயே தனது முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட பேராசிரியர் அவர்கள் அங்கு புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உயர் பட்டப்படிப்பு படிப்பதற்காகச் சென்று அங்கு உலகப்புகழ் பெற்று விளங்கிய பேராசிரியர் தோமஸ் பரோ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மொழி ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பையும் பெற்று 1956 இல் D. Phil பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மொழியியலில் பல்வேறு வகையான அரிய சிறந்த பல ஆய்வு நூல்களை எழுதிய பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் மொழியியலில் மட்டுமன்றி தமிழ் இலக்கிய துறையிலும் பல ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதியதோடு சிறந்ததொரு பதிப்பினையும் செய்து தமிழ் இயக்கத்திற்கும் பல்வேறு நிலைகளில் பெரும் பணியைச் செய்துள்ளார்.
இந்தவகையில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் தமிழ் இலக்கியப் பணியை சற்று விரிவாக நோக்குவோம்.
பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் இலக்கியப்பணி
ஈழத்து இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சதாசிவம் அவர்களின் இலக்கிய பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இதனை இவரது நூல்கள் மற்றும் கட்டுரைகள் மூலமாக அறிய முடிகின்றது. அந்த வகையில் சில நூல்களையும் கட்டுரைகளையும் எடுத்துக்கூறி அவற்றில் கூறப்பட்டுள்ள சில விடையங்களைப் பார்ப்பதன் ஊடாக பேராசிரியரின் பரந்த அறிவு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எந்தளவு உதவியுள்ளது என்பதை அறிய முடியும்.
இலக்கிய நூல்கள்
- ஈழத்துக் கவிதைக் களஞ்சியம்
- ஞானப்பள்ளு
- ஆராய்ச்சி கட்டுரை எழுதும் முறை
- கருத்துரைக் கோவை
கட்டுரைகள்
- செந்தமிழ்
- பண்டிதம்
- பழமையும் புதுமையும்
- பாஞ்சாலி சபதம்- புதுமையும் கற்பனையும்
- இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்
- தமிழ்க் காப்பியங்கள்
- ஈழமுந் தமிழும்
- ஈழத்துத் தமிழ் அறிஞர்கள்
- தொல்காப்பியம்
- எமது இலக்கியப் பாதை
- 19ஆம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
- சைவ சித்தாந்தம்
- காலத்தால் மூத்த செந்நெறி: சிவநெறியும் திருமுறைகளும்
- தமிழில் வேர்ச்சொற்கள்
- தொல்காப்பியரின் இலக்கண கொள்கைகள்
இவற்றை விட மேலும் பல இலக்கியம்,மொழியியல் மற்றும் சமயக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இங்கு கூறப்பட்ட நூல்கள், மற்றும் கட்டுரைகள் போன்றவற்றில் இருந்து பேராசிரியரின் பரந்த அறிவு , தேடல், ஆய்வுத்திறன் என்பவை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எந்தளவு உதவியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
இந்த வகையில்
ஈழத்துக் கவிதைக் களஞ்சியம்
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இந்நூலிற்கு தனியிடம் உண்டு. இதில் ஈழத்தில் வாழ்ந்த புலவர்களும், அவர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் பாடிய பாடல்களும் என்ற வகையில் வரிசைப்படுத்தி மிகுந்த பெரும் தேடல் கொண்டு தகவல்கள் திரட்டப்பட்டு இந்நூல் உருவாக்கப்படுள்ளது.
அச்சிடப்பட்டவை மட்டுமன்றி , எழுதி அச்சிடப்படாதவை , ஏட்டு வடிவில் இருந்தவை எல்லாவற்றையும் தேடிப்பிடித்து நூல் வடிவாக்கிய பேராசிரியரின் தொண்டு அளப்பெரியது.
145 ஈழத்து புலவர்கள் பற்றியும் அவர்களது கவிதைகள் பற்றியும் கூறும் இந்த நூலின் முக்கியத்துவம் பற்றி இந்நூலிற்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் திரு. சி. செல்வநாயகம்
அவர்கள் “ஈழநாட்டுத் தமிழ் இலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி ஆய்வதற்கும் ஈழத்துத் தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கிய சிறப்பினை மட்டிடுவதற்கும் ஒரு சிறந்த கருவியாக இந்நூல் அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஞானப்பள்ளு
பேராசிரியர் சதாசிவம் அவர்களது இலக்கியப் பணியில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது “ஞானப்பள்ளு” என்னும் நூலை திருந்திய பதிப்பாக மீளவும் உருவாக்கியது ஆகும்.
ஈழத்தில் எழுதப்பட்ட இரண்டாவது பள்ளு இலக்கியமான இந்த ஞானப்பள்ளு கத்தோலிக்கப் புலவர் ஒருவரால் பதினேழாம்நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இறை தூதர் யேசுகிறிஸ்துவின் புகழைப் பாடவந்த
இந்த நூல் பேராசிரியர். ஆ. சதாசிவம் அவர்களது இலக்கியக் காப்பின் மிகப்பெரிய சாதனைக்குரிய நூலாக அமைந்துள்ளது.
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக கொண்டுவரப்பட்ட இந்த நூலைப் பற்றி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் தனது நூலான “மொழியியற் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் ஆய்வுகளும் புலமைத்திறன்களும்“ என்ற நூலில் கூறும்போது “பேராசிரியர் சதாசிவம் அவர்கள் தனது ஞானப்பள்ளு நூலின் பதிப்புரையில் பள்ளு இலக்கியத்தின் தோற்றம் ,வளர்ச்சி, பாட்டியல் நூல்கள் கூறும் பள்ளு இலக்கிய இலக்கணம், ஞானப்பள்ளின் அமைப்பு முறை, பள்ளு இலக்கிய வளர்ச்சி முதலான பல்வேறு விடயங்களைத் தமிழில் தோன்றிய பள்ளு இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து எழுதியுள்ள ஆய்வுரை குறிப்பாக பல்கலைக்கழக மாணவருக்கும் தமிழ் ஆர்வலருக்கும் பெருந்துணையாக அமையத்தக்கவை. இந்த நூலின் தொடக்கத்தில் இருபத்தொரு பக்கங்களில் “பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் “ என்ற தலைப்பில் அமைந்துள்ள ஆய்வுக்கட்டுரை இலக்கிய வரலாற்று ஆய்விற்கு மிகவும் பயன்படத் தக்கதாகும். அதைத்தொடர்ந்து ஒன்பது பக்கங்களில் “ஞானப்பள்ளு நூலாராய்ச்சி” எனத் தரப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை பேராசிரியர் சதாசிவம் அவர்களின் இலக்கியப் புலமையையும், இலக்கிய வரலாற்று நோக்கையும் நன்கு புலப்படுத்துகிறது. மேலும் தமிழில் தோன்றிய பள்ளு நூல்களின் பெயர்களைத் தொகுத்துத் தந்திருப்பதும் பயனுள்ள தரவாகும்” எனப் கூறியுள்ளார்.
செந்தமிழ்
பேராசிரியர் எழுதிய கட்டுரைகளுள் சில அவர் வாழ்ந்த காலச் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. அத்தோடு பல கட்டுரைகள் ஆய்வு மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ளன.
செந்தமிழ் என்ற இந்தக் கட்டுரை 1960-1970களில் ஈழத்தில் எழுத்தாளர்களுக்கிடையே மொழிகளைக் கையாள்வதில் மரபுக்கும், புதுமைக்கும் இடையில் போராட்டங்கள் நடைபெற்றபோது பேராசிரியர் அவர்கள் பழமையின் பக்கம் நின்று தன் கருத்தை வெளிப்படுத்தியபோது எழுதப்பட்டது.
அன்றைய காலத்தில் நவீன இலக்கியப் படைப்புக்களான சிறுகதைகள் ,நாவல்கள் மற்றும் கவிதைகள் போன்றவற்றிலும் பேச்சுத்தமிழ் இடம்பெறுவது வழக்கமானதால் கொச்சைத் தமிழ், இலக்கியங்களை ஆட்சி செய்வதாக மரபு வழிப்பட்டோர் அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். முன்னர் கூறியது போல பேராசிரியரும் பழமையின் பக்கமே நின்று தனது கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். எழுத்திலக்கண வழுவும், சொல் இலக்கண வழுவுமின்றி பொருளை உயிரோட்டமாகக் கொண்ட தமிழே செந்தமிழ் எனப்படும். இந்தப் பொருள் புலப்படும் வகையில் அமைந்தது “செந்தமிழ்” என்னும் கட்டுரை.
பேராசிரியரது “பண்டிதம்” என்னும் கட்டுரையும் செந்தமிழ், மரபு போன்றவற்றை வலியுறுத்துவதாக உள்ளது. பேராசிரியரின் மரபுப் போராட்டத்தின் பயன் பற்றி முனைவர் வை. கனகரத்தினம் கூறும்போது
“இன்றும் ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை எல்லாக் கல்வி முயற்சிகளும் மொழித்தூய்மையுடன் பேணப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்ந்து செயல்படுவதைப் பார்க்கும் பொழுது பேராசிரியர் அவர்களின் போராட்டத்தின் பிரதிபலிப்பினை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது” என்கின்றார்.
பழமையும் புதுமையும்
“ பழமையும் புதுமையும் “ என்ற இந்த கட்டுரை பழமையைத் தழுவிய புதுமையே வேண்டப்படுவது” என பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான சமரசத்தை ஏற்படுத்துகின்றது.மேலும் இது புதிய இலக்கிய வாதிக்களையும் நெறிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
பாஞ்சாலி சபதம்: புலமையும் கற்பனையும்
இக்கட்டுரை பற்றி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பேராசிரியர் சதாசிவம் அவர்கள் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டு பல இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதற்கு “ பாஞ்சாலி சபதம்: புலமையும் கற்பனையும்” என்ற இந்தக் கட்டுரை சான்றாக விளங்குகின்றது. பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் புலமையையும் கற்பனையையும் அடையாளப்படுத்தும் அதேவேளை அப்படைப்பில் காணப்படும் தவறுகளையும் பேராசிரியர் சதாசிவம் இக் கட்டுரையில் சுட்டிக்காட்டத் தவறவில்லை
‘பாரதியார் பாஞ்சாலி சபதத்தை பாமர மக்கள் புரியும்படி அவர்களுக்கு மட்டுமே எழுதினார். மேலும் இது சமூக சீர் திருத்தத்தை மட்டும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கற்றவர் இரசனைக்கு உட்படாததாக உள்ளது. இலக்கியத்தை இரசித்து வாசிப்பவர்களுக்கு ஏற்ற அணிகள் ஏதும் கைக்கொள்ளப்படவில்லை, எளிய தமிழில் சமூக சீர்திருத்தம் ஒன்றை மட்டும் கொண்டு அவர் வாழ்ந்த காலத்தின் தேவைக்கு ஏற்பப் பாடியுள்ளார்.
பாரதியாரின் புலமைக்கும் கற்பனையும் கோபுரமாக விளங்குவது குயிற்பாட்டு. அப்பாடல்கள் மக்களின் நுண்ணுணர்வு கொண்டு விளங்கி இன்புறத்தக்கவை.
புலவனின் அனுபவத்திற்கு ஏற்ப கற்பனையும் வேறுபடும். புலவர் ஒருவர் ஆரை நோக்கி கவிதை புனைகிறாரோ அவரின் அனுபவத்திற்கு உட்பட்ட மொழி நடையையும், கற்பனையையும் கையாள்வது மிகவும் பொருத்தமானதாகும்.வாசகரின் மனவியல்பை முற்றிலும் உணர்ந்து கவிதை படைத்தவர் பாரதியார். எனவே பாஞ்சாலி சபதம் பொதுமக்களுக்கெனப் படைக்கப்பட்ட காவியமாதலால் பொதுமக்கள் உணரும் பான்மையிற் கற்பனையை எடுத்தாண்டார் பாரதியார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலி சபதத்தை ஆராயின் பாரதியாரின் புலமையும் கற்பனையும் விளங்கும் ‘ இதையே பேராசிரியர் சதாசிவம் எழுதிய இக் கட்டுரையின் சாரம் புலப்படுத்துகிறது. அத்தோடு இக் கட்டுரையில் அவரின் இலக்கிய விமர்சன ஆளுமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது”
எனவும் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் கூறுகின்றார்.
தமிழ் இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்
இக்கட்டுரையில் தொல்காப்பியத்திற்கு முன்னைய காலத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான மக்களின் வாழ்க்கை இலக்கியங்களில் எவ்வாறு பிரதிபலிக்கிறன. என்பவற்றை ஆய்வு நோக்கில் பார்த்து தனது கருத்துக்களை துணிவுடன்கூறியுள்ளார்.
மேலே கூறிய கட்டுரைகளையும் விடவும் மேலும் பல சிறந்த கட்டுரைகளை பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்கள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளுள் “19ஆம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி: தமிழ் அறிவியல் வளர்ச்சி “ என்ற கட்டுரையும் முக்கியமான ஒன்றாகும். இக்கட்டுரையில் செய்யுளால் அமைந்த இலக்கிய நூல்கள் அறிவு சார்ந்த விடயங்களைக் கூறுமாயின் அவை அறிவியல் நூல்கள் என்கின்றார். இதற்கு உதாரணமாக ஈழத்தில் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரராசசேகரம், செகராசசேகரம் என்ற நூல்களை உதாரணமாகக் கூறியுள்ளார்.
இவை தவிர “ஆய்வுக்கட்டுரை எழுதும் முறை “என்ற நூலும் “கருத்துரைக் கோவை” என்ற நூலும் முறையே அவரின் ஆய்வுத் திறத்தையும் மாணவர்களுக்கு பலன்தரக்கூடிய பல கட்டுரைகளையும் உள்ளடக்கி நிற்கின்றன.
பேராசிரியர் சதாசிவம் அவர்கள் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகள் பலவற்றில் பங்கிபற்றிச் சிறந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.
மேலே கூறப்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள் யாவற்றிலும் கூறப்பட்டுள்ள விடயங்களிள் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த மகத்தான பணிகளை எடுத்தியம்பி நிற்கின்றன.
ஈழத்துக் கவிதை இலக்கியம், பள்ளு இலக்கியம், நூல் ஆய்வு, மரபுபேணல்மொழி ஆய்வு, சமய சிந்தனைகளும் அவை சார்ந்த கட்டுரைகளும் என பேராசிரியரின் பன்முகப் பட்ட பார்வை தமிழ் இலக்கிய உலகில் இவருக்கென தனியிடம் இருப்பதனை எடுத்தியம்பி நிற்கின்றன.













