சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது
Share
தமிழகத்தில் சமூக நீதி ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வை நடத்துவதென்றும், இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயம், இதன் ஆய்வு வரம்புகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது. இதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் ஆணையம் தன் பணியைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றால் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொணரவும், அதனடிப்படையில் சமூக – பொருளியல் நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும். எனவே, இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













