LOADING

Type to search

இந்திய அரசியல்

பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

Share

கோவை பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை திறந்து வைத்தார். கோவையில் கட்டப்பட்ட பிரமாண்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் நடக்கிறது. இதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது நூலகத்தைப் பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திக தலைவர் வீரமணியுடன் சேர்ந்து பெரியார் அறிவுலகத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அறிவுலகத்தில் உள்ள அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மாணவர்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி நூலகத்தின் வசதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: திராவிடம், திராவிட இயக்கம், தந்தை பெரியார், பெரியாரின் கொள்கை ஆகியவை என்றால் என்ன என்று பெரியார் அறிவுலகத்திற்கு வந்து பார்த்து, தங்களது அறிவுத்திறனை பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். திராவிட மாடல் அரசினுடைய கனவுத்திட்டமான பெரியார் அறிவுலகத்தை ஆசிரியருடன் இணைந்து பார்த்தேன். மீண்டும் ஒருமுறை இங்கு வந்து முழுமையாக அறிவுலகத்தை பார்வையிடுவேன். நெல்லையில் காயிதே மில்லத் நூலகம், திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் அமைக்கும் பணிகள் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டன. அந்த நூலகங்களையும் இனி வரும் காலங்களில் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.