அநுராதபுரத்திற்கு முதலில் வந்தவர் சிவனா… புத்தரா?
Share
”இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 700 கோடி ரூபாவை பயன்படுத்தி பௌத்தர்களின் புனித பூமியான அநுராதபுரத்தில் சிதைவுகளாக இருக்கும் இந்து ஆலயங்களை புனரமைத்து பௌத்தர்களின் இதயத்தில் கைவைப்பதற்கு முயன்றால் இந்நாட்டு பௌத்தர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என மதவாத கூச்சலிடும் இந்த பேரினவாத மத வெறியர்கள்,இலங்கை வரலாற்றையும், புத்தர் யார்,புத்தர் எங்கிருந்து வந்தார் அவரின் மதம் என்ன என்பதனையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களை இலக்கு வைத்து இவர்கள் கக்கிவரும் மதவாத நச்சுக்கிருமிகள், நாட்டின் அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்”
——-கே.பாலா

பல்லாயிரமாண்டு காலத் தொன்மையும், நாகரிக வேர்களும் கொண்ட இலங்கையின் மண்ணில், இனவாதத்தின் நச்சு விதைகளை வித்திட்டுத் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்திய பேரினவாத சக்திகள், இன்று புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளன. தமிழ் மக்களின் நில உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் இனத்தீயைக் கொண்டு எரிக்க முற்பட்டவர்கள், தற்போது அநுராதபுரத்தின் புராதன இந்து ஆலயங்களை நோக்கித் தங்கள் மதவாதக் கைகளை நீட்டியுள்ளனர். தயாசிறி ஜயசேகரக்களும், உதய கம்மன்பிலக்களும் முன்னெடுக்கும் இந்த மதவெறி வெறுப்புப் பிரசாரங்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல.இலங்கையின் பல்லினப் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் ஆபத்தான சதித்திட்டமாகவேயுள்ளது.
அண்மையை சில நாட்களாக ஞானசார தேரரின் காவி உடைக் களைவை வைத்து இலங்கையில் மதவெறியைத் தூண்டியவர்கள் அது சற்று தணிந்ததும் தற்போது இந்து மதத்தின்மீது தமது மதவெறிப் பார்வையை திருப்பி உள்ளனர்.இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில், தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் இந்து ஆலயங்கள் மற்றும் புனித நிலங்கள் இருக்கும் இடங்களான குருந்தூர் மலை,திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று,காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் உள்ள சிவன் கோவில்,நெடுங்கேணி வெட்டுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம்,அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களும், உள்ளூர்வாசிகளும் வழிபட பயன்படுத்திய அம்பாறை மாயக்கல்லி மலை ,திருகோணமலை மாணிக்கமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் என்பவற்றை தமது பௌத்த மதத்திற்குரிய இடங்களெனகூறி இதுவரை ஆக்கிரமித்தவர்கள் தற்போது அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களை இலக்கு வைத்து இவர்கள் கக்கிவரும் மதவாத நச்சுக்கிருமிகள், நாட்டின் அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவுள்ளது
மதவெறித் தீயை மூட்டிய தயாசிறி
அநுராரபுரம் புனித பூமி அபிவிருத்தியின் போது அங்குள்ள இரண்டு இந்து ஆலயங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு இந்து ஆலயங்கள் புனரமைக்கப்பட்டால் சிங்கள பௌத்தர்களுக்கு இது பிரச்சினையாகும். அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக இந்தியாவினால் 700 கோடி ரூபா நிதி வழங்கப்படும் நிலையில், அந்த நிதி குறிப்பிட்ட இரண்டு ஆலயங்களின் நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்படுமா என்பதனை அரசாங்கம் கூற வேண்டும்.அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் போது பின்பற்ற வேண்டிய முறைமைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போதுள்ள 28 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை 38 சதுரக் கிலோ மீட்டர் வரையில் விருத்தி செய்வது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய வலயம், கவனம் செலுத்தப்பட வேண்டிய வலயம் மற்றும் பொது வசதிகள் வலயம் என்று 3வலயங்களாக அதனை பிரிக்கவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அதிக கவனம் செலுத்த வேண்டிய வலயத்தில் புதிய வழிபாட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக அங்குள்ள இந்து ஆலயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டு பழைய இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றின் சிதைவுகளே உள்ளன. அவற்றில் பூஜைகள் நடக்கின்றன. இந்நிலையில் அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக இந்தியாவினால் 700 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அறியக் கிடைத்துள்ளது.இந்நிலையில் அண்மையில் இந்தியாவில் இருந்து இந்து மதகுருவொருவர் வருகை தந்தார். அவரை வெளிவிவகார அமைச்சர் வரவேற்றார். அவரை நாட்டில் பல பகுதிகளுக்கும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இராமர் ஆலயங்கள் தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே அவரை இவ்வாறு அழைத்துச் சென்றனர். இவ்வாறான நிலைமையில் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள 700 கோடி ரூபாவை அநுராதபுரத்தில் சிதைவுகளாக இருக்கும் இந்து ஆலயங்களை புனரமைக்க பயன்படுத்துவீர்களா? என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம்.
அதாவது இது தொடர்பில் பெரும் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. அட்டமாஸ்தானங்களின் மகாநாயக்க தேரர்களை நாங்கள் சந்தித்தோம். இந்த நிதியை பயன்படுத்தி அங்கு இரண்டு இந்துக் கோயில்களை நிர்மாணிக்கப் போகின்றனரா? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது சிங்கள பௌத்தர்களுக்கு பெரும் பிரச்சினையாகும். அத்துடன் வடக்கு, கிழக்கில் பெருமளவில் எமது தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவற்றை வர்த்தமானியில் அறிவிக்கவும் அரசு தாமதிக்கின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட வெளியாகியுள்ள வர்த்தமானிக்கு அமைய இராமர் ஆலயத்தை அமைக்கும் முயற்சிகள் உள்ளனவா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன .என்று ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தற்போதை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான தயாசிறி ஜயசேகர மீண்டும் நாட்டில் மதவாத தீயைப் பற்ற வைத்தார்.
பௌத்தர்களின் இதயத்தில் கைவைத்தால்,,,
உதய கம்மன்பிலவின் எச்சரிக்கை
பௌத்தர்களின் புனித பூமியான அநுராதபுரத்தில் சகல மதங்களையும் உள்ளடக்கிய வணக்கஸ்தலங்களை நிர்மாணித்து பௌத்த மதத்தின் இதயத்தை சர்வ மத சாம்பாராக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. பௌத்த விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த அரசாங்கம் பௌத்தர்களின் இதயத்தில் கை வைக்குமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கு பூமரங்காகவே வந்து முடியும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம்.தற்போதைய அரசாங்கம் பௌத்த விரோத வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கின்றது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மகாநாயக்க தேரர்களால் கைகளில் கட்டப்பட்ட பிரித் நூலை அகற்றினர். அதன்பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது ஜயமங்கல கீதம் நிறுத்தப்பட்டது. 22ஆவது திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை கணக்கில் எடுக்கவில்லை. ஜனாதிபதி பௌத்தர்கள் வடக்கிற்கு இனவாத செயற்பாடுகளுக்கே செல்கின்றனர் என்றார்.
திருகோணமலையில் பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன். பிக்குகள் கைது செய்யப்பட்டனர். பிக்குகளின் காவி உடை அகற்றப்பட்டது. பல்வேறு குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய போதும் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கப்படாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதனால் இந்த அரசாங்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கூட செய்யாத அளவுக்கு பௌத்த விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
அநுராதபுரம் என்பது உலகவாழ் பௌத்தர்களின் இதயம். 1500 வருடங்களாக தொடர்ச்சியாக தலைநகரமாக இருந்த அநுராதபுரம் போன்ற நகரம் உலகில் எங்கேயும் இல்லை. இவ்வாறான அநுராதபுர நகரத்தை பௌத்தர்கள் இருக்கும் அரசாங்கத்தினால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். பௌத்த எதிர்ப்பு கொள்கையில் இருக்கும் அரசாங்கம் அநுராதபுரத்தில் கை வைப்பது என்பது பௌத்தத்தின் அழிவுக்கானது என்றே கூற வேண்டும். இவ்வாறான அரசாங்கத்தினால் பௌத்தர்களின் இதயத்தில் கைவைப்பதற்கு இந்நாட்டு பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள்.
இதேவேளை புனித பூமி அபிவிருத்தியின் போது நிலக்கீழ் நிர்மாணங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தூபிகளின் அடித்தளங்கள் பலவீனமடையும். இதனால் தூபிகளை அழிக்க இவர்கள் திட்டமிடுகின்றனரா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.அத்துடன் மேலும் வணக்கஸ்தலங்களை உள்ளடக்கி புனித பூமியை விருத்திச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வணக்கஸ்தலம் என்ற வசனத்திற்கு முன்னால் பௌத்த வணக்கஸ்தலம் என்றோ புரதான வணக்கஸ்தளம் என்றோ குறிப்பிடப்படவில்லை. அப்படியென்றால் சகல மதங்களின் வணக்கஸ்தலங்களையும் அநுராதபுரம் புனித பூமியில் நிர்மாணித்து, பௌத்த மதத்தின் இதயத்தை சர்வ மத சம்பார் போன்று மாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பது இதன்மூலம் தெரிகின்றது.
ஏற்கனவே சிவன் கோயிலொன்று அநுராதபுரம் புனித பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் திட்டத்தின்படி இராமர் கோயில் மற்றும் சீதையம்மன் கோயிலை நிர்மாணிக்கும் நோக்கத்தில் அது தொடர்பான சரத்துக்களை புனித பூமி அபிவிருத்தி வர்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுகின்றன. பௌத்த விரோத திசைக்காட்டி அரசாங்கம் அநுராதபுரம் புனித பூமியெனும் பௌத்தர்களின் இதயத்தில் கை வைத்தால் இந்த அரசாங்கத்திற்கு பூமரங்காகவே வந்து முடியும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம் எனக்கூறி தயாசிறி மூட்டிய மதவாத்தீயை கொழுந்து விட்டு எரிய வைத்தார் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில.
இவர்கள் மட்டுமல்ல முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இலங்கை அதிரடிப்படைகளின் முன்னாள்தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ,இலங்கை ஒரு பௌத்த நாடு. தொல்பொருள் திணைக்களத்தின் எல்லைக்குள் இருக்கும் பௌத்த விகாரைப் பகுதிகளில் இந்துக்கள் உரிமைகோர முடியாது. சட்டத்தையும் மீறி வழிபாடுகளில் ஈடுபட்டால் அல்லது விகாரை அமைப்பதைத் தடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என அச்சுறுத்தியுள்ளார்
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, வடக்கு-கிழக்கில் மட்டுமன்றி, அநுராதபுரம் போன்ற புனித பௌத்த நகரங்களிலும் இந்து மற்றும் ஏனைய சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் திட்டமிட்டு பௌத்த பாரம்பரியத்தை அழிப்பதற்காக அமைக்கப்படுகின்றன. இது பௌத்த இலங்கைக்கான சர்வதேச சதி என்று கூறியுள்ளார்.
பொதுபலசேன மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புகள்,அநுராதபுரம், பொலநறுவை போன்ற நாட்டின் வரலாற்றுப் பகுதிகள் தூய்மையான பௌத்த தளங்கள். இங்குள்ள பழமையான இ ந்து ஆலயங்கள் சோழர் படையெடுப்பின் போது கட்டப்பட்டவை அல்லது ஆக்கிரமிப்புகளின் மூலம் உருவானவை. எனவே பௌத்த புனித நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்து கோயில்களின் பிரம்மாண்டமான விரிவாக்கங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்” வலியுறுத்தியுள்ளன .
பௌத்தரான தாய்லாந்து பிரதிப் பிரதமரும்
இந்தியாவின் இந்து மதத் துறவியும்
இதேவேளை இலங்கைக்கு வருகைத் தந்த பௌத்தரான தாய்லாந்து பிரதிப் பிரதமருக்கு இராஜதந்திர அடிப்படையில் வரவேற்பளிக்கப்படாது அவர் புறக்கணிக்கப்பட்டார்.அதேவேளை இந்தியாவிலிருந்து இலங்கை வந்த இந்து மதத் துறவியை வெளிவிவகார அமைச்சர் சென்று வரவேற்றார்.பௌத்த மதத்தை சேர்ந்த தாய்லாந்து பிரதிப் பிரமருக்கு அளிக்காத வரவேற்பை இந்துமத துறவிக்கு வழங்கியதன் மூலம் அநுரகுமார அரசாங்கம் பௌத்த மதத்தை அவமதித்து இந்து மதத்திற்கு முன்னுரிமையளிக்கின்றது என்ற குற்றச்சாட்டை சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் எம்.பி. யுமான திலித் ஜயவீர பாராளுமன்றத்தில் முன்வைக்க தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பி இந்து மதத்திற்கு,இந்து மதத் துறவிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். இந்த இன .மத வசதிகளுடன் ”தமிழ் தற்குறி”யான அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.யும் இணைந்து இந்து மதத்தை மிக மோசமாக விமர்சித்தான்.
அநுராதபுரம் பௌத்தர்களின் இதயமா?
அநுராதபுரம் என்பது இலங்கையின் பண்டைய தலை நகரங்களில் ஒன்றாக மட்டுமன்றி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்து-பௌத்த கலாசாரக் கலப்பின் மையமாகவும் விளங்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம்.அநுராதபுரத்தில் இந்து மத வழிபாட்டுத் தலங்கள் சோழர் காலத்திற்கு முன்பிருந்தே (கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதலே) நிலவி வந்ததை இலங்கையின் முதன்மை வரலாற்று நூலான ”மகாவம்சம்” உறுதிப்படுத்துகிறது. கி.மு. 437 – 367 காலப்பகுதியில் பண்டு காபய மன்னனே அநுராதபுர நகரைத் திட்டமிட்டு நிர்மாணித்தவர்.(பண்டு காபய என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் “பண்டு கபாயன்” (பண்டு என்றால் “பழைய” ,கபாயன் என்றால் “சிவன்”) என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான “முந்துசிவன்” என்ற பெயரை ஒத்து உள்ளது என்றும், இதன்மூலம் இவன் ஒரு தமிழ் மன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது) இந்த பண்டுகாபய மன்னன் சிவலிங்க வழிபாட்டிற்கான கட்டிடங்கள் பிராமணர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் காளி,சிவன் வழிபாட்டுத் தலங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் அமைத்துக் கொடுத்ததாக மகாவம்சத்தின் பத்தாம் அத்தியாயம் குறிப்பிடுகிறது.தேவநம்பியதீச மன்னன் காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமாவதற்கு முன்பே, அநுராதபுரத்தில் சைவமும் வைணவமும் தழைத்தோங்கியிருந்தன.
அநுராதபுரத்தின் முதன்மையான வரலாற்று இந்து ஆலயங்களாக பஸவக்குளம் சிவன் கோவில் உள்ளது அநுராதபுரத்தின் புராதன ‘அபயவாவி’ (இன்றைய பஸவக்குளம்) குளக்கரையை ஒட்டி அமைந்துள்ள மிகவும் தொன்மையான சிவன் கோவில் இதுவாகும். கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் சோழர் ஆட்சிக்காலத்திலும் அதற்கு முந்தைய அநுராதபுர மன்னர்கள் காலத்திலும் இங்கு சிவலிங்க வழிபாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த சிவன் கோயில் முற்றிலும் செதுக்கப்பட்ட உயர்தர கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இது 5.55 மீற்றர் நீளமும் 13.20 மீற்றர் அகலமும் கொண்டது. ஒரு பாரம்பரிய இந்து ஆலயத்தின் கூறுகளான அந்தராளம் , மண்டபம் மற்றும் கர்ப்பக்கிருகம் ஆகிய அமைப்புகளை இது கொண்டிருந்தது.தற்போது இக்கோயில் முற்றிலும் சிதைவடைந்த நிலையில் உள்ளது . இக்கோவிலின் அசல் வரலாற்றுப் பெருமைமிக்க பல கற்கள் மற்றும் இடிபாடுகள், அருகில் புதிதாகக் கட்டப்பட்ட பிள்ளையார் கோயிலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இங்கிருந்த அசல் சிவலிங்கம் மற்றும் சில வரலாற்று எச்சங்கள் தற்போதும் அந்த பிள்ளையார் கோயிலிலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இலங்கையின் பௌத்த காலத்திற்கு முந்தைய அல்லது ஆரம்பகால வரலாற்று இந்து மரபுகளுக்குச் சான்றாக இந்த சிவன் கோயில் விளங்குகிறது.
அடுத்ததாக அநுராதபுரம் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது அநுராதபுரத்தின் எஞ்சியிருக்கும் பழமையான இந்து வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் மக்களால் “காளி கோவில்” என்று அழைக்கப்படும் இது, பல நூற்றாண்டுகளாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இக்கோயிலின் கட்டுமான அமைப்புகள் பண்டைய கதிர்காம விஷ்ணு கோயில் அமைப்பை ஒத்த இருவரிசை கல் தூண்களைக் கொண்டுள்ளன. இன்றும் அநுராதபுரப் புனித நகர எல்லையை ஒட்டி இயங்கிவரும் வழிபாட்டு மையங்களில் இது முதன்மையானது. அதுமட்டுமன்றி அநுராதபுரத்தின் அரச அரண்மனை வளாகம் மற்றும் உட்புற நகரப் பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பல இந்து ஆலயங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்னைய தமிழ் வர்த்தகச் சமூகத்தினரும் அரச படைகளில் இருந்த தமிழ் வீரர்களும் வழிபடுவதற்காக கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை பல சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் இங்கு கட்டப்பட்டிருந்தன.
கி.பி. 993 – 1070 களில் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் அநுராதபுரத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் திரளான கற்கோவில்கள் அமைக்கப்பட்டன.அநுராதபுரப் பண்பாட்டு எல்லைக்கு உட்பட்ட நாளந்தாவில் அமைந்துள்ள ‘கேடிகே’, பல்லவ கட்டிடக்கலை மற்றும் சிங்கள பௌத்த கட்டிடக்கலையின் அரிய கலவையாகும். இது இந்து-பௌத்த வழிபாட்டு மையமாக விளங்கிய வரலாற்றுச் சின்னமாகும். அநுராதபுர அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்மன், விஷ்ணு மற்றும் பிள்ளையார் செப்புத் திருமேனிகள் அநுராதபுர அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
எனவே அநுராதபுரம் என்பது ஒரு குறிப்பிட்ட பௌத்த மதத்திற்கு மட்டும் சொந்தமான நகரம் அல்ல.அது பௌத்த ஸ்தூபிகளுடன் இந்து ஆலயங்களும் தோளோடு தோள் நின்று நிலவிய பல்லினப் பண்பாட்டு நகரம் என்பதை தொல்பொருள் சான்றுகள் மூலம் நிறுவலாம். பண்டைய சிங்கள மன்னர்களான பண்டுகாபய, அக்கபோதி போன்றோர் இந்து ஆலயங்களுக்கு நிலங்களையும் மானியங்களையும் அளித்ததை வரலாற்று சாசனங்கள் கூறுகின்றன. வரலாற்றுப் பின்னணியற்ற அரசியல்வாதிகள் அநுராதபுரம் இந்து ஆலயங்களை “புதிய ஆக்கிரமிப்புகள்” என சித்திரிக்க முயல்வது, நாட்டின் உண்மையான வரலாற்று சான்றுகளையும் மகாவம்சத்தின் பதிவுகளையுமே மறுதலிப்பதாகவேயுள்ளது .
புத்தரே மகத்தான ஒரு இந்துதான்
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தியில் இந்தியாவின் நிதி உதவியில் இந்துக்கோவில்கள் புனரமைக்கப்படப்போகின்றன. நிர்மாணிக்கப்படப்போகின்றனவென மதவாத கூச்ச்சலிடும் இந்த மத வெறியர்கள்,இலங்கை வரலாற்றையும், புத்தர் யார்,புத்தர் எங்கிருந்து வந்தார் என்பதனையும், ஸ்ரீமாபோதி (புனித வெள்ளரசு மரம்) எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்
இன்றைய நேபாள நாட்டின் லும்பினி என்னும் இடத்தில் இந்து மதப் பின்னணி கொண்ட சாக்கிய குலத்து மன்னர் சுத்தோதனருக்கும், அரசி மாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் புத்தர். இவரின் இயற்பெயர் சித்தார்த்தர். பிறந்த சில நாட்களிலேயே தாய் மறைந்ததால், சிற்றன்னை கௌதமியால் வளர்க்கப்பட்டார்.அரண்மனை வாழ்க்கையின் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வந்த சித்தார்த்தர், யசோதரை என்ற மனைவியையும் ராகுலன் என்ற மகனையும் பெற்றிருந்தார். ஒருநாள் நகர உலா செல்லும்போது முதியவர், நோயாளி, பிணம் மற்றும் ஒரு துறவி ஆகிய நான்கு காட்சிகளைக் கண்டார். மனித வாழ்க்கையின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி, அதற்கான தீர்வைக் கண்டறிய அரண்மனையை விட்டு வெளியேறினார்
பல்வேறு குருமார்களிடம் பயின்றும், கடுமையான உபவாசங்கள் இருந்தும் உண்மை புலப்படவில்லை. இறுதியாக பீகாரில் உள்ள போதிகயாவில் என்னும் இடத்தில், அரச மரத்தின் (போதி மரம்) அடியில் தியானத்தில் அமர்ந்தார். வைகாசி பௌர்ணமி நாளில் அவருக்கு முழுமையான ஞானோதயம் கிடைத்தது. தனது வாழ்நாளின் எஞ்சிய ஆண்டுகளை மக்களுக்கு நல்வழி காட்டவும், அன்பையும் அமைதியையும் பரப்பவும் செலவிட்டார். உத்திரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் எனும் இடத்தில் தனது 80ஆவது வயதில் பரிநிர்வாணம் (இயற்கை எய்தினார்) அடைந்தார்.புத்தர் பிறந்த சூழல் இந்து சமயக் கலாசாரத்தைச் சேர்ந்தது. தனது ஞானோதயத்தின் மூலம் ‘பௌத்த மதத்தை’ உலகிற்கு அளித்தவர்தான் இந்த புத்தர் .அதாவது பிறப்பால் அக்கால வேதக் கலாசாரத்தில் (இன்றைய இந்து மதம்) பிறந்த புத்தர். தந்து தத்துவத்தால் வேத நெறிகளை நிராகரித்து ‘பௌத்தம்’ எனும் தனித்துவமான வழியைத் தோற்றுவித்தவர்.
இலங்கை யாருக்கு சொந்தம் ?
வரலாற்று ரீதியாகவும் தொல்பொருள் ஆதாரங்களின்படியும் இலங்கையில் இந்து மதத்தின் தொன்மையான வடிவங்களே (சைவம்/வேத வழிபாடுகள்) முதலில் நிலவின. அதற்குப் பிறகே பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.பௌத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இலங்கையின் கடற்கரை நகரங்களில் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்ட தொன்மையான சிவாலயங்களான திருகோணமலை கோணேஸ்வரம்,மன்னார் திருக்கேதீஸ்வரம்,சிலாபம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரம் மற்றும் தொண்டீஸ்வரம் என்ற பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன.இராமாயணக் கதைகளின்படி, இராவணன் சிவபக்தனாக இருந்ததாகவும், அவனது ஆட்சிக் காலத்தில் இலங்கையில் சைவ வழிபாடே நிலவியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இலங்கையின் பண்டைய மகாவம்சம் நூல், தேவநம்பிய தீச மன்னனுக்கு முன் ஆண்ட பண்டு காபய மன்னன் காலத்தில் அநுராதபுரத்தில் பிராமணர்கள், சிவலிங்க வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற துறவிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.இந்தியாவில் மாமன்னர் அசோகரின் ஆட்சிக் காலத்தில், அவரது மகனான மகிந்த தேரர் (அரஹத் மகிந்தர்) இலங்கைக்கு வருகை தந்து, அன்றைய மன்னன் தேவநம்பிய தீசனை பௌத்தத்திற்கு மாற்றினார். அதன்பின்னரே பௌத்த மதம் அரச மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவியது என்பதுதான் வரலாறு
இலங்கையின் வரலாறு இவ்வாறிருக்க வீட்டுக்குள் ஒட்டகம் புகுந்த கதையாக வந்த பௌத்தமதமும் பௌத்தர்களும் இன்று முழு இலங்கையையும் உரிமை கோரி பௌத்த மதத்திற்கே முதலிடம் என அரசியலமைப்பில் வரித்து தமிழ் முஸ்லிம் மக்களை இலங்கையின் வந்தேறுகுடிகளாக்கி இனவாத,மதவாத தீயைபயன்படுத்தி ஆட்சிபுரிகின்றார்கள்.தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள,தற்போதைய அநுரகுமார அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க, புனிதமான வழிபாட்டுத் தலங்களையும், மக்களின் மத நம்பிக்கைகளையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் தயாசிறி ஜயசேகர மற்றும் உதய கம்மன்பில போன்ற இன,மதவெறி அரசியல்வாதிகளின் வஞ்சக மதவெறி அரசியல் வெறுமனே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது மட்டுமல்ல.ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் ஆபத்தானது.













