LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவின் மொன்றியால் நகரிலும் வாசகர்கள் ஆதரவைப் பெற்ற ‘புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்-2026

Share

கடந்த ஒக்டோபர் 24ம் 25ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் கனடிய தமிழர் பேரவையினர் இணைந்து நடத்திய ‘தமிழ்ப் புத்தக அரங்கு-2026’ புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து மேற்படி இரண்டு நாள் கண்காட்சியில் பங்குபற்றிய வெளியீட்டுக் குழுவினர் சிலர் மொன்றியால் மாநகரிலும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகியவற்றை நடத்த விரும்பினர். தொடர்ந்து அங்கு வாழும் தமிழ் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையிலும் அங்குள்ள எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையிலும் கடந்த ஒக்டோபர் 31ம் திகதி மொன்றியாலில் அவர்களது எண்ணம் நிறைவேறும் வகையில் பலரின் ஒத்துழைப்பின் மத்தியில் கண்காட்சி வெற்றியளித்தது.

மொன்றியால் வாழ் தமிழ் மொழிப் பாதுகாவலர்கள் என்ற வகையில் கல்வியாளர்களும் தமிழ் மொழிப் பற்றாளர்களும் திரண்டு வந்து ரொறன்ரோவிலிலிருந்து சென்றிருந்த ஏற்பாட்டாளர்கள் திருவாளர்கள் பௌசர், அஸ்மின் ஆசித், எழுத்தாளர் எஸ். கே. விக்னேஸ்வரன் மற்றும் திருமதி பத்மினி முரளிதரன் ஆகிய நால்வரும் கூட்டாக ஏற்பாடு செய்த இந்த புதிய முயற்சிக்கு வாசகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி அதரவளித்தனர்.

மொன்றியால் மாநகரில் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கியவண்ணம் தமிழ்ப் பணி மற்றும் தமிழ் மொழி கற்பித்தல் ஆகிய சேவைகளை ஆற்றிவரும் ‘ஆத்மஜோதி கல்விக் கூட மண்டபத்தில் அதன் நிர்வாக இயக்குனர் சசிகிருஸ்ணா அவர்கள் தலைமையில் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பெற்றன.

திருவாளர்கள், சசிகிருஸ்ணா, வீணைமைந்தன் சண்முகராஜா, அஸ்மின் ஆசித் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றன.

அங்கு வெளியிடப்பெற்ற சில நூல்கள் பற்றிய அறிமுக உரைகளை கவிஞர் ஆறு ஶ்ரீகாந்தன், ஆசிரியை திருமதி யோகமதி, திருமதி இளவரசி இளங்கோவன், மற்றும் சசி கிருஸ்ணா ஆகியோர் ஆற்றினர்.

மொன்றியால் வாழ் எழுத்தாளரும் கவிஞருமான வீணைமைந்தன் சண்முகராஜா அவர்களின் நூல்கள் பற்றிய விமர்சன உரைகள் அவரது நூல்களை வாசகர்கள் வாங்கிச் செல்லும் அளவிற்கு தூண்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மொன்றியால் மாநகரில் தமிழ்ப் பணியும் கல்விப் பணியும் ஆற்றிவருபவர்கள் என்ற வகையில் முறையே வீணைமைந்தன் சண்முகராஜா மற்றும் சசி கிருஸ்ணா ஆகியோர் ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பெற்றனர்.

மேலும், அங்கு கருத்துரை வழங்கிய வாசகர்கள் சிலர் அடுத்த வருடமும் இவ்வாறான புத்தகக் கண்பாட்சி இடம்டபெற்றால் தான் புதிய நூல்களை வாங்கிப் படிக்க முடியும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

—மொன்றியால் ஆத்மஜோதி நிறுவன செய்திப் பிரிவு