LOADING

Type to search

இந்திய அரசியல்

‘காவேரியின் குறுக்கே அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடியென வைகோ தெரிவித்துள்ளார்

Share

‘காவேரியின் குறுக்கே அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடியென ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்த நிலையில், கர்நாடக முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், ‘நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்-அமைச்சர் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் அணையைக் கட்டுவதற்கு இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. கட்சி வேறுபாடின்றி, கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ தலைவர்கள் அனைவரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தைப் பற்றி நேரடியாகப் புரிந்துகொள்ளத் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகத்திற்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை கர்நாடகா ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தாது’ என்று தெரிவித்துள்ளார்.

காவேரியின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது என்று கர்நாடக முதல்-அமைச்சர்கூறி இருப்பது மோசடியாகும். 2018 பிப்ரவரி 16-ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவானது. ‘இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது.

ஆனால் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வஞ்சகமான முறையில், மத்திய பா.ஜ.க. அரசின் அனுமதியைப் பெற்று மேகதாது அணையைக் கட்ட முனைந்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் காவேரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் நிலைமைதான் ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, மேகதாது அணைத் திட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.