சீமான், ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘அமீரா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது
Share
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘அமீரா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அரசியல், சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநர் ரா.சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமீரா’. இப்படத்தில் சீமான், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, வினோதினி, ஜெபக்குமார், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் சீமான், தமிழ்ச்செல்வன் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தருகிறார் காவல்துறை அதிகாரி. ஆனால், தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரும் அந்த நபர் உண்மையான குற்றவாளி இல்லை என்பதை அதிகாரி அறிந்து கொள்கிறார். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அவர், நிரபராதிக்கு நீதி கிடைக்கச் செய்யவும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் மீண்டும் விசாரணையில் இறங்குகிறார். இந்தக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘அமீரா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.













