LOADING

Type to search

உலக அரசியல்

ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்டுள்ளது

Share

கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் பத்திரமாக மீட்டுள்ளது. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், இந்திய மாலுமிகள் சிலர் ஏமன் நாட்டில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியானது. அவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஏமன் நாட்டில் சிக்கிய 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“ஏமனில் உள்ள இந்தியத் தூதரகம், கடந்த 2 வாரங்களாக ஏமனின் ஹொடைடா மற்றும் சனாவில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை வெற்றிகரமாக மீட்டுள்ளது. அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளனர். மேலும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நமது இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்க உதவிய சம்பந்தப்பட்ட அனைவருக்கும், அவர்களின் மதிப்புமிக்க ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தூதரகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.”