LOADING

Type to search

இந்திய அரசியல்

சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படுமென அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்

Share

சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு ஆகிய பிரிவுகளில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், கழிவறைப் பகுதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவினை பயோமெட்ரிக் முறையில் பதிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் விவரங்கள், அவர்களின் பணி விவரங்கள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் இம்மருத்துவமனையில் அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்க தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.